(எம்.எப்.எம்.பஸீர்)

கிளிநொச்சி - பளை பிரதேசத்தில் , இரவு நேர உணவகம் ஒன்றுக்குள்  நுழைந்த குழுவொன்று, அவ்வுணவகத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தாக்குதல் நடத்திய குழுவில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அடங்குவதாக அவர்கள் கேசரிக்கு தெரிவித்தனர்.  

இந்நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடாத்தும் காணொளியும் கேசரிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

கையில் தடியுடன்,   இந்த உணவகத்தின்  காசாளர் உள்ளிட்டவர்கள் இதன்போது தாக்கப்படுகின்றமை சி.சி.ரி.வி. பதிவுகள் ஊடாக வெளிப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்குதலானது, கடந்த நவம்பர் 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்ய முடிந்தது.

இது தொடர்பில் பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை கேசரி தொடர்புகொண்டு வினவிய போது,  முகக் கவசம் ( மாஸ்க்) அணியாமல் இருந்தமையால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இது தொடர்பில் ஆராய உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முகக்கவசத்துடன் உணவகத்தில் உணவருந்த முடியாது எனவும், முகக்கவசம் அணியமையால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுவதை நம்ப முடியாது எனவும் தாக்குதலின் பின்னனியில் வேறு காரணம் இருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

எவ்வறாயினும் இந்த தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்ட நிலையில், முறைப்பாடு செய்யாமைக்கான காரணம் பொலிசாரின் அழுத்தமே என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்படும் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  குலரத்னவிடம்  இது தொடர்பில் கேசரி வினவியது. தான் ஜீப்பில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், காற்று காரணமாக கதைப்பது தெளிவாக கேட்கவில்லை என அழைப்புக்கு பதிலளித்த அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் வடக்கில் வர்த்தகர்களுக்கு  அழுத்தம் கொடுக்கும் இவ்வாறான பல சம்பவங்கள் கடந்த காலங்களிலும் பதிவாகியிருந்தன.  

கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மையில் வர்த்தகர் ஒருவரிடம் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை கோரிய  குரல் பதிவொன்றும் இணையத்தில் கசிந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.