(இராஜதுரை ஹஷான்)

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடல், மின்சார சபையின் நிர்வாக கட்டமைப்பை 8 கட்டமாக வேறுப்படுத்தலை தவிர்த்தல் உள்ளிட்ட 6 பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அக்கோரிக்கைகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தாத காரணத்தினால் இன்று முதல் வரையறுக்கப்பட்ட அளவில் கடமையில் ஈடுப்படுதலின் இரண்டாம் கட்டத்தை தொடர தீர்மனித்துள்ளோம்.

அவசர நிலைமைகள் மற்றும் மின்துண்டிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் வரையறுக்கப்பட்ட கடமை நேரத்திற்கு மேலதிகமாக சேவையில் ஈடுப்பட போவதில்லை. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நியூபோர்ட் நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை செயற்படுத்துவதை இடைநிறுத்தல் அவசியமாகும். முறையற்ற  மற்றும் சட்டவிரோத  இயற்கை திரவ எரிவாயு கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்காதிருத்தல், தேசிய மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இயற்கை திரவ எரிவாயு (எல்.என்.ஜி) விலைமனு கோரல் நடவடிக்கைகளை  தொடர்ந்து முன்னெடுத்து செல்லல், 1969 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மின்சார சபை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுக்கும் முயற்சியை முன்னெக்காதிருத்தல் மற்றும் பொது முகாமையாளர் பதவி நியமனத்தை அரசியலாக்குவதை தவிர்த்தல்.

மின்சார சபையின் சிரேஷ்ட முகாமையாளர்களை இடமாற்றம் செய்வதை இடைநிறுத்தல், மின்சார சபையின் நிர்வாக கட்டமைப்பினை 8 பகுதிகளாக பிரிக்கும் தீர்மானத்தை நிறுத்தல் உள்ளிட்ட ஆறு பிரதான கோரிக்கைகளை  முன்வைத்து கடந்த 25ஆம் திகதி பகல் 12 மணிமுதல் சட்டப்படி வேலையில் ஈடுப்பட தீர்மானித்தோம்.

அதற்கமைய சட்டப்படி  வேலை தொழிற்சங்க நடவடிக்கை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை ஆரம்பமாகும் அதற்கமைய சேவை நேரம் வரையறுக்கப்பட்டது. எனினும் அவசர நிலைமைகள் மற்றும் மின் துண்டிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் வரையறுக்கப்பட்ட கடமை நேரத்திற்கு மேலதிகமாக கடமைக்கு சமுகமளித்தோம்.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கொள்முதல் குழுக்கள், தொழினுட்ப குழுக்கள், செயற்திட்ட குழுக்கள் மற்றும் இணக்கப்பாட்டு குழுக்கள், விலைமனு தொடர்பான குழுக்கள் உள்ளிட்ட குழுக்களில் இருந்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் விலகியுள்ளோம்.

முன்வைக்கப்பட்ட 6 பிரதான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிடின் அவசர நிலைமைகள் மற்றும் மின்துண்டிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் வரையறுக்கப்பட்ட கடமை நேரத்திற்கு மேலதிகமாக சேவையில் ஈடுப்படுவதில் இருந்து விலகுவோம் என ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் இதுவரையில் கவனம் செலுத்தவில்லை.

இன்று முதல் அவசர நிலைமைகள் மற்றும் மின்துண்டிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் வரையறுக்கப்பட்ட கடமை நேரத்திற்கு மேலதிகமாக சேவையில் ஈடுப்படபோவதில்லை. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.