நாட்டில் தொடரும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பங்கள்

By T. Saranya

02 Dec, 2021 | 10:45 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வெலிகம - கப்பரதொட சுற்றுலா விடுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சமையல் எரிவாயு கசிவினால் நாளாந்தம் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அதற்கமைய நேற்று புதன்கிழமை முற்பகல் வரை இரு சம்பவங்களும், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 8 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதனால் பொது மக்கள் பேரச்சத்தில் உள்ளதுடன் அரசாங்கமும் குழப்பத்தில் உள்ளது.

புதன்கிழமை

கண்டி

கண்டி - குண்டசாலை, நத்தரம்பொத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை அதிகாலை எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். காயங்களுக்குள்ளான பெண் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் நேற்று காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த பின்பு இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

அத்தோடு நேற்றைய தினம் நானுஓயா பகுதியில் மது விற்பனை நிலையமொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரின் ரெகுலேட்டர் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை

எம்பிலிபிட்டி

எம்பிலிபிட்டி பொலிஸ் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இரண்டாவது சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. எம்பிலிபிட்டி - அபேவர்தன குலரத்ன வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இவ்வாயு அடுப்பு வெடித்துள்ளது.

சம்பவத்தை நேரில் கண்ட வீட்டிலிருந்த பெண் தெரிவிக்கையில் , ' சமைப்பதற்காக தயார் செய்து விட்டு சற்று வெளியில் சென்றதன் பின்னர் சமையலறையிலிருந்து பாரிய வெடிப்பு சத்தமொன்று கேட்டது. அருகில் சென்று அவதானித்த போது எரிவாயு அடுப்பின் கண்ணாடி சிதறிக் கிடந்ததோடு , தீ பற்றிக் கொண்டிருந்து. அருகிலுள்ளவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இதன் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.' என்றார்.

இதே பிரதேசத்தில் கந்துருகஸ்ஆர பிரதேசத்தில் விற்பனை நிலைமொன்றில் பின்னால் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறான வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டிலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இதன் போது உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. அடுப்பு முழுமையாக சேதமடைந்துள்ளது.

தியதலாவை

தியதலாவை தொடம்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலும் இதேபோன்று வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது வீட்டிலிருந்த யுவதி அது தொடர்பில் தெரிவிக்கையில் , ' சமையல் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றமையால் நாம் விறகு அடுப்பிலேயே சமைக்கின்றோம். காலை 7.30 மணியளவில் தாய் என்னுடைய தங்கையை பாடசாலைக்கு அழைத்துச் சென்றதன் பின்னர் சிறிது நேரத்தில் சமையலறையிலிருந்து பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அதன் பின்னர் நான் படுக்கை விரிப்பை எடுத்துச் சென்று சிலிண்டரின் மேல் இட்டு ரெகுலேட்டரை அகற்றி , சிலிண்டரை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விட்டேன். எனினும் எரிவாயு அடுப்பு முற்றாக சேதமடைந்திருந்தது.'  என்றார்.

திஹாரிய

திஹாரிய - மல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டிலிருந்த பெண் வெளியேறி சற்று நேரத்தில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது குறித்த பெண் வீட்டில் இருந்திருந்தால் பாரதூரமான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பண்டாரவளை

பண்டாரவளை - பிந்துனுவௌ, அளுத்கம பகுதியிலும் எரிவாயு கசிவு காரணமாக  தீ பரவியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையால் பாதிப்புக்குள்ளான  நபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடளித்துள்ளார்.

கொட்டகலை

கொட்டகலை பத்தனை பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவியொவர் தேநீர் தயாரிப்பதற்காக சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத்த சிறிது நேரத்தின் பின்னர் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர கிரிஉல்ல , பாணந்துரை, ஹூங்கம - அத்படுவ உள்ளிட்ட இடங்களிலும் இவ்வாறு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right