(இராஜதுரை ஹஷான்)

கடந்த ஏப்ரல் மாதம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட 18 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர்கள் அனைத்தும் கடந்த ஜூன் மாதமே முழுமையாக மீள பெற்றுக் கொள்ளப்பட்டன. அந்த சிலிண்டர்களினால்  பாதிப்பும் ஏற்படவில்லை.அதன் பிறகு விநியோகிக்கப்பட்ட சிலிண்டர்களின் கலவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. 

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகளையும் மூன்றாம் தரப்பு சுயாதீன நிறுவனத்தின் கவனத்திற் கொண்டு செல்வது அவசியம் என்பது எமது நிலைப்பாடாகவுள்ளது.

பாவனையாளர்கள்  எரிவாயு சிலிண்டரின் மேற்பகுதியில் சவர்கார நீரை ஊற்றி பரிசோதனைகளில் ஈடுப்படுவது அபாயகரமானது.

எரிவாயு கசிவு தொடர்பில் ஏதேனும் சந்தேகம் காணப்பட்டால் 1311 என்ற இலக்கத்திற்கு அழைத்து நிறுவனத்தினரது சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு சிலிண்டர் நிறுவனத்தின் விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனக பதிரன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து என்ற நிலைக்கு அப்பால் செல்வதை அவதானிக்க முடிகிறது. இதுவரை காலமும் இவ்வாறானதொரு செயற்பாடு ஒருபோதும் இடம்பெறவில்லை. எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என குறிப்பிட்டுக் கொள்ளப்பட்டு பிறிதொரு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா ? என்ற சந்தேகம் காணப்படுகிறது.

லிட்ரோ ரக எரிவாயு சிலிண்டர் பாவனையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகளின் ஈடுப்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அது எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.சமையல் எரிவாயு சம்பவம் தொடர்பிலான வெடிப்பு சம்பவங்கள் கவலைக்குரியன.

 சமையல் எரிவாயு சிலின்டர்களின் விலை தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் நுகர்வோர் மத்தியில் பல பிரச்சினைகள் காணப்பட்டன.அதற்கமைய நுகர்வோரின் நலனை கருத்திற் கொண்டு 18 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் சந்தையில் விநியோகிக்கப்பட்டது.18 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் கலவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

18 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரை சந்தையில் விநியோகிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையும், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும் அனுமதி வழங்கவில்லை. நுகர்வோர் அதிகார சபை நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்ததை தொடர்ந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட 18 கிலோகிராம் நிறையுடைய அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் இரண்டு மாத காலத்திற்குள் மீள பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர் விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.தற்போது எரிவாயு சிலிண்டரை அடிப்படையாகக் கொண்ட விபத்துக்கள் பரவலாக பேசப்படுகின்றன.எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை அடுப்புக்கள் மாத்திரம் வெடித்துள்ளன. எமது நிறுவனம் அடுப்புக்களை விநியோகிக்கவில்லை.

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம் பெற்ற எரிவாயு சிலிண்டரை அண்மித்த விபத்துக்களை முழுமையாக பரிசோதனை செய்துள்ளோம்.சிலிண்டருடன் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற இணைப்புக்கள்,அடுப்புக்கள் வெடிப்பு சம்பவத்திற்கு பிரதான காரணியாக காணப்படுகிறது.

வெடிப்பு சம்பவங்களின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பினர் தற்போது அறிக்கை சமர்பித்துள்ளனர்.பல்வேறு மாறுப்பட்ட விடயங்கள் தற்போது குறிப்பிடப்படுகின்றன.எரிவாயு சிலிண்டரின் தரம் தொடர்பிலும்,அதன் கலவை தொடர்பிலும் ஆராய்வதற்கான வசதிகள் இலங்கையில் கிடையாது.

ஆகவே இப்பிரச்சினையை மூன்றாம் தரப்பினரின் சுயாதீன ஆய்விற்கு உட்படுத்துவது அவசியமாகும்.

 சமையல் எரிவாயுவில் கசிவு உள்ளதா என்பதை ஆராய நுகர்வோர் ஒரு மாத காலத்திற்கு முன்னர் பாவித்த சமையல் எரிவாயு சிலிண்டரின்  மேற்பகுதியில் சவர்கார நீரை ஊற்றி தன்னிச்சையான முறையில் பரிசோதனைகளில் ஈடுப்படுகிறார்கள்.இது முற்றிலும் தவறானதாகும்.

சமையல் எரிவாயு கசிவு தொடர்பில் ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் 1311 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து நிறுவனத்தினரது உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.