அதிபர் சேவை தரம் மூன்றுக்கு புதிதாக நியமனம் பெற்ற அதிபர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனவே அவர்கள் விரைவில் தமக்கான பாடசாலைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த பாடசாலைகளில் தற்போது அதிபர்களாக பதில் கடமையாற்றுபவர்கள் மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் பிரதி அதிபர்களாக கடமையாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வியமைச்சில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையிலுள்ள 10ஆயிரத்து நூற்று 61 பாடசாலைகளில்  4 ஆயிரத்து நானூறு பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடம் நிலவியது.

அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக உரிய முறையில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. போட்டிப்பரீட்சைக்கு 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். அதில் 19 ஆயிரம் பேர் பரீட்சைக்குத் தோற்றினர். எனவே மூவாயிரத்து தொள்ளாயிரத்து ஒருவர் அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது. 

எனினும் அவ்வதிபர்களுக்கு பாடசாலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகையினால் அது தொடர்பில் கல்வியமைச்சால் அமைச்சரவைக்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கபட்டது. எனவே குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் குழுவொன்று அமைக்கப்பட்டு அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கிணங்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது குறித்த அதிபர்களுக்கு உரிய பாடசாலை வழங்குவதற்கான அனுமதி  கிடைக்கப்பெற்றது. ஆகவே நியமனம் பெற்ற அதிபர்களுக்கு விரைவில் உரிய பாடசாலைகள் வழங்கப்படவுள்ளது. 

மேலும் மூன்று வருடங்களுக்கு மேல் பாடசாலைகளில் அதிபர்களாக பதில் கடமையாற்றியவர்களுக்கு  மீண்டுமொரு பரீட்சை நடத்தி அதில் தெரிவுசெய்யபடுபவர்களை அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கு இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. அத்துடன் புதிய அதிபர்கள் பொறுப்பேற்கும் பாடசாலைகளில் தற்போது பதில் கடமையாற்றுபவர்களை  மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் பிரதி அதிபர்களாக கடமையாற்றுவதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.