(எம்.மனோசித்ரா)

'ஒமிக்ரோன்' பிறழ்வு குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக

தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட 'ஒமிக்ரோன்' பிறழ்வு டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இந்த பிறழ்வு தடுப்பூசிகளால் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற காரணியும் ஆய்வு மட்டத்திலேயே உள்ளதாக வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீன ஜானக தெரிவித்தார்.

Articles Tagged Under: ஒமிக்ரோன் | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தென் ஆபிரிக்காவில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் பாரிய மாற்றங்கள் இனங்காணப்பட்டமையால் அவற்றை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அபாயமுடையவையாக அறிவிக்கப்பட்டன.

தடுப்பூசிகளால் பெற்றுக் கொண்ட பாதுகாப்பு இந்த பிறழ்வின் மூலம் இல்லாமலாக்கப்படுமா என்பது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே போன்று இது டெல்டாவை விட ஆபத்தானதா மற்றும் அதனை விட வேகமாகப் பரவக் கூடியதா என்ற காரணிகளும் இன்னும் ஆய்வு மட்டத்திலேயே உள்ளன.

இலங்கைக்குள் 'ஒமிக்ரோன்' பரவியுள்ளதா என்பதை இலகுவாகக் கண்டறிய முடியும். எழுமாறாக பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் ஆய்வு கூடங்களில் ஆய்விற்கு உட்படுத்தப்படும் போது அதனைக் கண்டறிய முடியும். ஒமிக்ரோன் மாத்திரமல்ல. எந்த வைரஸ் பரவினாலும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.