(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டாவிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அடிமைத்தனத்தின் தற்கால வடிவங்கள் , அதன் காரணங்கள், விளைவுகள் உள்ளிட்டவை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

பாரம்பரிய அடிமைத்தனம், கடன் கொத்தடிமை, கட்டாய உழைப்பு, அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனம் சார்ந்த நிலைமைகளில் உள்ள சிறுவர்கள் , பாலிய அடிமைத்தனம், கட்டாய மற்றும் இள வயது திருமணங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றன விசேட அறிக்கையாளரின் ஆணையில் உள்ளடங்கும்.

இந்த சந்திப்பின் போது தொழிலாளர் நலன் தொடர்பான இலங்கையின் முன்னேற்றம் மற்றும் சிறுவர் தொழிலாளர் முறைமையை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

சிறுவர் தொழிலாளர்கள் , புலம்பெயர் தொழிலாளர்கள் , கடன் கொத்தடிமைகள் உட்பட பல துறைகளில் சர்வதேசத்திற்கு ஏற்ப இலங்கையின் தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்தார்.

இலங்கையை 'சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத வலயமாக மாற்றுவது தொடர்பான இலங்கையின் முன்னேற்றத்தை விசேட அறிக்கையாளர் பாராட்டினார்.

பாதிக்கப்படக் கூடிய தொழிலாளர் குழுக்களை பாதுகாப்பதில் இலங்கை விழிப்புடன் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் , ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட துறைகளில் இலங்கையின் அனுபவங்களை புரிந்து கொள்வதற்கும் , சர்வதேச அர்ப்பணிப்புக்களுக்கு இணங்க உள்நாட்டு செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் விசேட நடைமுறைகள் ஆணை பெற்றவர்களின் விஜயங்கள் உதவியாக இருந்தததாக அவர் குறிப்பிட்டார்.