டொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.

By T. Saranya

01 Dec, 2021 | 10:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐந்து வார காலத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான டொலர்கள் மாத்திரமே அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ளன.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் ஏதும் கிடையாது. டொலர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புக்களை ஆரம்பத்தில் சுட்டிக்காட்டினோம். அவை தற்போது உண்மையாகியுள்ளன.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அறிந்துக் கொள்ளும் நிலையில் ஜனாதிபதி இல்லை. ஜனாதிபதியின் செயற்பாடுகள் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை தீவிரப்படுத்தியுள்ளதே, தவிர சீர்செய்யாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1000ஆயிரம் கொள்கலன்களை விடுவிப்பதற்கும், மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.அரசாங்கத்திடம் போதுமான கையிருப்பு கிடையாது.

டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தினசரி அதிகரித்துள்ளன. மக்கள் எதிர்க்கொண்டு அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் அரசாங்கத்திடம் கிடையாது.

டொலர் நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இம்மாதத்திற்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான டொலர் கையிருப்பு மாத்திரமே அரசாங்கத்திடம் உள்ளது. டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

டொலர் பற்றாக்குறை காரணமாக பல பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. எதிர்வரும் மாதம் முதல் மூன்று மாத காலத்திற்கான அத்தியாவசிய செலவுகளுக்கு மாத்திரம் சுமார் 6 பில்லியன் டொலர் அவசியமாகும். மறுபுறம் பெருமளவிலான அரச முறை கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.

இம்மாதம் மாத்திரம் 350மில்லியன் டொலரும்,2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மி;ல்லியன் டொலரும், ஜூன் மாதம் 1000மில்லியன் டொலரும் அரசமுறை கடன் செலுத்தப்பட வேண்டும். தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு முதலீட்டு அடிப்படையில் வழங்கி அதனூடாக கடன்களை செலுத்தும் நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

மக்கள் வங்கி கடந்த செப்டெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம்1.1 பில்லியன் பெறுமதியான கடன்பத்திரங்களையும்,இலங்கை வங்கி கடந்த செப்டெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையாள காலப்பகுதியில் 1.3 பில்லியன் பெறுமதியான கடன் பத்திரங்களை விநியோகித்துள்ளன.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அந்திய செலாவணி அனுப்புவதை மட்டுப்படுத்தியுள்ளார்கள். 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மாத்திரம் 631 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 317 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வருடத்தில் ஜுன் மாதம் தொடக்கம் கடந்த மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஊடாக கிடைக்கப் பெற்ற அந்நிய செலாவணி 1226மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளன.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கும்,அதனால் மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கும் பொறுப்பு கூறுவது யார் என்ற போட்டித்தன்மை அரசாங்கத்திற்குள் எழுந்துள்ளன.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தெளிவுப்பெறும் நிலையில் ஜனாதிபதி இல்லை.அவரது செயற்பாடுகள் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை தீவிரப்படுத்துகிறதே தவிர சீர்செய்யவில்லை.

பிரதமர் அரசியல் முரன்பாடு காரணமாக மனம்போன போக்கில் செயற்படுகிறார். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மக்களுக்கு பயனற்ற வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்து விட்டு பாராளுமன்றிற்கு வருகை தராமல் அரச முறை பயணம் என குறிப்பிட்டுக் கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய வங்கியின் ஆளுநர் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு தீர்வு காணும் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தாமல்அரசாங்கத்தின் பிரதிநிதியை போல் செயற்படுகிறார்.மாலுமி இல்லாத கப்பலை போன்ற நிலையில் நாடு பயணிக்கிறது.

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் குறுகிய மற்றும் நீண்ட காலத்திட்டங்கள் அரசாங்கத்திடம் கிடையாது.; பொருளாதாரத்திற்கு காலம்காலமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் திட்டங்களை முன்வைத்து அரச தலைவர்கள் ஆட்சிக்கு வரவில்லை.

அரசியல் ரீதியிலான சிறந்த தீர்மானங்களை நாட்டு மக்கள் இனியாவது முன்னெடுக்க வேண்டும். பொருளாதாரத்திற்கு ஏற்பட்டு;ள்ள பாதிப்புக்களுக்கு சிறந்த தீர்வை முன்வைக்கும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right