(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இராணுவத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்வரும் தேர்தல்களில் தேசிய இராணுவ கட்சி ஒன்றை உருவாக்கி போட்டியிடவுள்ளோம் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவைசெய்யும் இராணுவத்தினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுத்ததில்லை. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இராணுவத்தை பாதுகாப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து நடடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தே ஆட்சிக்கு வருகின்றன.

தற்போது இந்த அரசாங்கத்தில் இராணுத்தினர் சிறையிலடைக்கப்படுகின்றனர். அண்மையிலும் மன்னாரில் இராணு வீரர்ரகள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று எக்னெலிகொட வழக்கில் புலனாய்வு துறையைச்சேர்ந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

கடந்த அரசாங்க காலத்தில் அமைச்சராக இருந்த மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா இராணுவ வீரர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார். அப்போது இன்று இராணுவத்தினருக்காக கூக்குரல் இடும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, பந்துல குணவர்த்தன போன்றவர்கள் இதற்காக வாய்திறக்கவில்லை. 

தற்போது பந்துல குணவர்த்தன இராணுவ வீரர் ஒருவரை பிணையில் எடுப்பதற்காக 20 லட்சம் ரூபா பணம் சேகரித்துள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் புலனாய்வு துறையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சிறையில் இருக்கும்போது நலன் விசாரிப்பதற்கு கூட இவர்கள் செல்லவில்லை. அத்துடன் அவர்களில் 4பேர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்படும்போது கூட்டு எதிர்க்கட்சியைச்சேர்ந்த ஒருவர் மாத்திரமே நீதி மன்றத்துக்கு வந்திருந்தார்.

ஆனால் நாமல் ராஜபக்ஷ் சிறையிலடைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்படும்போது கூட்டு எதிர்க்கட்சியினர் பாரியளவில் மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.  கூட்டு எதிக்கட்சியில் இருக்கும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் இராணுவ வீரர்கள் தொடர்பில் மேடைகளில் பேசுவதெல்லாம் அவர்களின் சுய அரசியல் நோக்கத்திற்காவே அன்றி இராணுவத்தின் மீதுகொண்ட மரியாதைக்கல்ல.

எனவே இராணுவ வீரர்களின் நல நோம்புக்காகவும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தேசிய இராணுவ கட்சி என்ற பெயரில் கட்சியை அமைத்து இராணுவ குடும்பத்தாரை அதில் இணைத்துக்கொள்ளவுள்ளோம். அத்துடன் இந்த கட்சியை அமைக்கவிடாமல் கூட்டு எதிர்க்கட்சி என்னை தடுத்துவருகின்றது. அதற்காக நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றார்.