(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு, கிழக்கில், மலையகப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் காணப்படும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு முடிவுக்கான  வேண்டும். இதன் மூலமே தேசியப்பாடசாலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (01)  இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஓய்வூதியம்  வயதெல்லை 65 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிப்பார்வைக்கு இதனை நல்ல விடயமாக பார்க்கலாம். ஆனால் 20-22  ஆசிரியராக நியமனம் பெறும் ஒருவர் தனது வாழ்நாளில் 55 வயது, 60 வயது வரை உடல்ரீதியான உழைப்பை வழங்கி அவர் ஓய்வு பெறும் காலத்தில் இயற்கை மரணம் எய்துபவர்களின் கணக்கை பார்த்தால் 65 வயதுக்குள் இயற்கை மரணத்தை அடைபவர்கள் அநேகமானவர்கள் ஆசிரியர்களாகத்தான் இருக்கின்றார்கள். 

அரச உத்தியோகத்தர்களில் ஆசிரியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக  இருக்கின்றார்கள். எனவே ஓய்வூதிய வயது என்பது 55 வயதாக இருந்து கொண்டு  விரும்பினால் 65 வயது வரை சேவை  புரிய முடியும் என்ற திட்டமே இந்த நாட்டுக்கு பொருத்தமாக இருக்கும்.

2020 மார்ச் மாதத்திற்கு பின்னர் பலர் ஓய்வு நிலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  55 வயதிலே அவர்கள் ஓய்வுக்கு விண்ணப்பித்து அவர்கள் 5 வருடங்களுக்கு மேலும் நீடிப்பு கேட்டு 60 வயதிலே அவர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளார்கள். ஆனால் தற்போது ஓய்வு பெறும் வயது 65 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அப்படியானால் 2020 ஆம் ஆண்டிலே கொரோனாவை காரணம் காட்டி வேலை செய்ய முடியாது ஓய்வு பெற்ற இந்த ஓய்வூதியர்களும் தாங்கள் 65 வயது வரை சேவையாற்ற விரும்புவதாக விண்ணப்பித்தால் இந்த அரசு அவர்களையும் 65 வயதுவரை அனுமதிக்க வேண்டும். அதுதான் யதார்த்தம்.

கல்வி அமைச்சு. உயர்கல்வி அமைச்சு ,தேசிய கல்வி நிறுவகம்,பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டு திணைக்களம் ஆகியவற்றில் தமிழ் மொழி மூலமான செயற்பாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.  

கடந்த 10 வருடங்களை திரும்பிப்பார்த்தால் கல்வி அமைச்சில் 4 மேலதிக செயலாளர்கள் இருக்கின்ற போது ஒருவர் தமிழராக  இருந்தார். 

ஆனால் இன்று கல்வி அமைச்சில் 9 மேலதிக செயலாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் ஒருவர் கூட தமிழராக  இல்லை. ஒரு மேலதிக செயலாளரையாவது தமிழ் மொழிமூல மேலதிக செயலாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் கல்வி அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களில் மொழி ரீதியான பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

கல்வித்துறையில் போதிய ஆளணிகள் இல்லை. கல்வி அமைச்சுக்கு நாம் செல்கின்றபோது தமிழ் மொழியில் பேச முடியாதுள்ளது. வேறு அமைச்சுக்களிலும் இதே நிலைதான். இது ஒரு பாரிய பிரச்சினை.

தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். தமிழ் மொழிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கென தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். 

இலங்கையின் கல்வி நிர்வாக சேவையில் கூட தமிழ் மொழிமூல ஆளணி பற்றாக் குறையாகவுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தேவையான கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளால் மூன்றில் இரண்டு  பகுதியினரே  இப்போதுள்ளனர். 

வடக்கை எடுத்துப்பார்த்தால் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 238 பேருக்கான வெற்றிடம் இருக்கின்றது. அங்கு இருக்கின்றவர்கள் மொத்த தொகை 136 இன்னும் 102 பேருக்கு அங்கு வெற்றிடம் உள்ளது.

இதேபோல் இலங்கை அதிபர்கள் சேவையில் 1,212 பேருக்கு வடக்கு மாகாணத்திலே தேவை இருக்கின்றது. ஆனால் அங்கு நியமிக்கப்பட்டிருப்பவர்கள் 972 பேர். இன்னும் 240 பேருக்கு வெற்றிடம் உள்ளது. 

அதேபோல் இலங்கை ஆசிரியர் சேவையை சார்ந்தவர்களில் வடக்கு  மாகாணத்திற்கு  18,286 பேர் தேவை.ஆனால் 16,987 பேர்தான் இருக்கின்றார்கள். இன்னும்  1,299 பேருக்கு வெற்றிடங்கள் உள்ளன. 

இது கல்வி ரீதியான பெரும் விழுக்காடு தேசிய பாடசாலைகளின் பெருமை பற்றி கூறினீர்கள். 1,987 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தத்தின்  ஊடாக  மாகாணத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு  கல்வி அதிகாரம் ,சுகாதார அதிகாரம் வழங்கப்பட்டது. 

இப்போது  மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் 13 ஆவது திருத்தமும் கிடப்பில்போடப்பட்டு இந்த அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அதிகாரங்கள் பறிப்பில் ஒருவகைதான் இந்த தேசிய பாடசாலைகள் திட்டமாகும். 

இந்த தேசிய பாடசாலைகள் மூலம் நாட்டில் சாதிக்கப்பட்ட விடயங்கள் என்ன? முழங்காவில் தேசிய பாடசாலையில் என்ன முன்னேற்றம் நடந்துள்ளது? இந்த பாடசாலை தேசிய பாடசாலையாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகின்றன. 

இங்கு ஏற்பட்ட முன்னேற்றத்தை  உங்களால் சொல்ல முடியுமா? ஏனைய பாடசாலைகளுக்கு கிடைத்த வசதிகள் கூட இந்தப்பாடசாலைக்கு கிடைக்கவில்லை.

இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகளில் இலங்கை அதிபர் சேவை 1 ஐ சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்யக்கூடிய பாடசாலைகள் 43 என சுற்றறிக்கை மூலம் சொல்லப்பட்டுள்ளன. இதில் எந்தவொரு தமிழ் பாடசாலையும் கிடையாது. அதேபோல் இலங்கை கல்வி நிர்வாக சேவை 1 ஐ சேர்ந்தவர்கள் அநேகமாக வலய கல்விப்பணிப்பாளர்களாக ,மாகாண கல்விப்பணிப்பாளர்களாக இருக்கின்றார்கள். 

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகள் இந்த தரத்தை சேர்ந்தவர்கள் அதிகாரம் செலுத்த முடியும்.  இது  தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள 40 பாடசாலைகளில்  ஒரு பாடசாலைக்கூட தமிழ்பாடசாலை இல்லை. மேற்கூறிய தரத்தை சேர்ந்த தமிழ் அதிபர் ஒரு தமிழ் பாடசாலைக்கு அதிபராக செல்ல முடியாத நிலைதான் உள்ளது.

அதேபோல் இலங்கை கல்வி நிர்வாக சேவை 2 அல்லது 3 ஐ சேர்ந்தவர்கள் அதிபர்களாக கடமையாற்றக்கூடிய பாடசாலைகளாக  62 பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தான்  9 தமிழ் பாடசாலைகள் இலங்கை  முழுவதிலுமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதான் தேசிய பாடசாலைகளின் தரங்கள். அப்படியானால் வடக்கில், கிழக்கிலே ஏனைய இடங்களில் உள்ள தமிழ் பாடசாலைகள் வளர்ச்சி பெற முடியும்? இது மிகப்பெரும் பாதகமான விடயம். 

எனவே இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வடக்கு,கிழக்கில், மலையகப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் காணப்படும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு முடிவுக்கான  வேண்டும். இதன் மூலமே தேசியப்பாடசாலைகளில்  முன்னேற்றம் கொண்டுவர முடியும் என்றார்.