(நா.தனுஜா)

முல்லைத்தீவு ஊடகவியலாளரொருவர் இராணுவ சிப்பாயினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை முற்றாக மறுத்திருக்கும் இலங்கை இராணுவம், அச்சம்பவம் வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவத்தினரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில குழுவினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதிநடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த பிராந்திய ஊடகவியலாளரொருவர்மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதுமாத்திரமன்றி குறித்த ஊடகவியலாளர் தனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்களைக் காண்பித்து, இராணுவ சிப்பாய் ஒருவர் முட்கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையினால் தாக்கியமையினாலேயே அந்தக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறுகின்ற காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் அதிகளவானோரால் பகிரப்பட்டதுடன் அதற்குப் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான விஷ்வலிங்கம் விஷ்வசந்திரன் இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் இராணுவப்பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து இராணுவத்தளபதியின் உத்தரவிற்கு அமைவாக கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய்கள் உள்ளடங்கலாக மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பெருமளவான சமூகவலைத்தளப்பக்கங்களும் சில பத்திரிகைகளும் இச்சம்பவம் தொடர்பில் உரியவாறு ஆராயாமல் செய்திகளை வெளியிட்டிருந்ததுடன் அவை மிகைப்படுத்தப்பட்டவையாகவும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை உள்ளடக்கியவையாகவும் காணப்பட்டன.

குறித்த ஊடகவியலாளர் முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகை உள்ளடங்கலாக அப்பகுதியில் பணியிலிருந்த சிப்பாய்களை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது, அதற்கான காரணம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஊடகவியலாளரிடம் கேள்வியெழுப்பினார்.

அதனையடுத்து அவருக்கு அருகில் செல்வதற்கு இராணுவ சிப்பாய் முற்பட்டபோது, ஊடகவியலாளர் ஒளிப்பதிவு செய்தவாறே பின்வாங்கிச்சென்றார். அவரது மோட்டார் சைக்கிள் பின்னால் தரித்துநிறுத்தப்பட்டிருந்த நிலையில், சடுதியாக அதில் தடைப்பட்டுநின்ற அவர் முட்கம்பிவேலி இருந்த அப்பகுதியில் விழுந்ததுடன் மீண்டும் எழுந்தபோது தனது கைகளில் காயமேற்பட்டிருப்பதை அவதானித்தார்.

இந்த விபத்து இடம்பெற்று சில செக்கன்களுக்குள் குறித்த ஊடகவியலாளரின் குறுந்தகவலுக்காகக் காத்திருந்த - கவனமாகவும் தீங்கேற்படுத்தும் வகையிலும் இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்ட குழுவினர் கமராக்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் சகிதம் அங்கு வருகைதந்ததுடன் குறித்த ஊடகவியலாளர் முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது இராணுவ சிப்பாயினால் 'மிகமோசமாகத்' தாக்கப்பட்டதைப்போன்று சித்தரிக்கக்கூடியவகையிலான காணொளிகளை ஒளிப்பதிவு செய்தனர். 

அதுமாத்திரமன்றி குறித்த ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கைகளின்படி சிராய்ப்பு மற்றும் இரத்தக்கசிவு ஆகியவற்றுக்கு மாத்திரம் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கின்றதே தவிர, அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டதைப்போன்று முட்கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டமைக்கான சான்றுகள் இல்லை.

எனவே வடக்கு உள்ளடங்கலாக நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் நலன்களை உறுதிசெய்வதற்கான அர்ப்பணிப்பை இராணுவம் கொண்டிருக்கின்றது. 

ஆகவே இத்தகைய திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளினால் யாரும் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. மாறாக நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதற்கு அனைவரும் கைகோர்க்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.