(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் மீதான அமெரிக்க மற்றும் இந்திய ஊடுருவல்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் உள்ளக இரகசியங்கள் அம்பலமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பை மிகவும் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். 

இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி கொண்டு வரப்பட்டால் பாரிய சவால்களையே எதிர் கொள்ள நேரிடும் . ஆகவே அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான பொருளாதாரத்தை மையப்படுத்திய ஒப்பந்தங்களை அரசாங்கம் மறுபரிசீலணை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் எதிர்பார்ப்புடன் அரசாங்கம் செயற்படுகின்றது. பொருட்கள் கொள்வனவில் மாத்திரம் இதுவரைக் காலமும் இருந்த இந்தியா தற்போது சேவை துறையை நோக்கி வியாபிக்கின்றது. 

இதனால் உள்ளுர் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளின் தரம் கேள்விக்குறியாவதுடன் இலங்கையர்களுக்கு தொழிலின்மையும் ஏற்பட போகின்றது. 30 ஆயிரம் பட்டதாரிகள் இதுவரையில் நாட்டில் உள்ளனர். எட்கா ஒப்பந்தம் ஊடாக இலங்கை இந்தியாவின் பொருளாதார பிராந்தியமாகும் நிலையே காணப்படுகின்றது. இதற்கு முன்னர் இந்தியாவுடன் செய்துக் கொள்ளப்பட்ட சுதந்திர பொருளாதார ஒப்பந்தங்களில் இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்த்தினால் எவ்விதமான நன்மையும் இலங்கைக்கு கிடையாது. மாறாக இந்தியா முழு அளவில் பலனை அடைகின்றது. 

உள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தியாவின் அவசர சிகிச்சை சேவை தென் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? இரகசிய தகவல்களை திருடும் பொருட்டே இவ்வாறான சேவைகளை இலங்கையில் அறிமுகம் செய்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் மற்றுமொரு ஆபத்தான ஒப்பந்தத்தை செய்துக் கொள்வதன ஊடாக நிலைமை மோசமடையும்.

மேலும் உள் நாட்டு இறைவரி தினைக்களத்தின் வரி சேகரிப்பு பிரிவை அமெரிக்காவின் மெகன்ஸி என்ற  நிறுவனத்திற்கு கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது மிகவும் ஆபத்தான விடயமாகும். உள் நாட்டு பாதுகாப்பு மற்றும் அரச இரகசியங்கள் வெளிநாடுகளுக்கு தெரிய கூடிய நிலையே இதில் காணப்படுகின்றது. இதனால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.