ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

பெருந்தோட்டங்களில் தேசிய மயப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத காரணத்தினால் ஏனைய வைத்தியசாலைகளை துரிதமாக தேசிய மயமாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளதென ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். அரவிந்தகுமார் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மலையக தோட்டப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளை பொறுத்தவரை, முன்பெல்லாம் தோட்ட நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அவ்வாறான நிலையொன்று இல்லை, இலாபத்தை கருத்தில் கொண்டு தோட்ட வைத்தியசாலைகளை கைவிடும் நிலைமையே காணப்படுகின்றது.

 ஒரு சில வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலையாக மாற்றினாலும் பல வைத்தியசாலைகள் கைவிடப்பட்டுள்ளன. ஆகவே சகல வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 

ஏற்கனவே தேசிய மயப்படுத்தப்பட்ட  வைத்தியசாலைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத காரணத்தினால் ஏனைய வைத்தியசாலைகளை துரிதமாக தேசிய மயமாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இன்னமும் அதன் தாக்கத்திற்கு முகங்கொடுத்து வருகின்றோம். சுகாதார தரப்பின் பங்களிப்புடன் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுத்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். 

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் வேளையில் நாம் ஆரோக்கியமான, பாதுகாப்பான நிலையிலும், நோயை கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலும் உள்ளோம் என்றே கூற வேண்டும் என்றார்.