(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புதிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் மூலம் அடிப்படை உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, வலுகட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். இவை தனிமைப்படுத்தல் சட்டமும் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களும் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதையே காண்பிக்கின்றன. 

அத்தோடு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் தன்னிச்சையாகவும் பக்கச்சார்பான முறையிலும் செயற்படுவதற்கும் இவை வாய்ப்பேற்படுத்தியிருப்பதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் விசனம் வெளியிட்டுள்ளது.

கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் கையாளும் விதம் மற்றும் அதன் சட்டரீதியான தன்மை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

ஒன்றுகூடுதல், தொடர்பாடல் மற்றும் கருத்து வெளியிடுதல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்தின்கீழ் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையும் உள்ளடங்குகின்றது. 

தேர்தல்களில் வாக்களிப்பதற்கு அப்பால் ஆர்ப்பாட்டங்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு வழிகளிலும் அரசியல் செயன்முறையில் பொதுமக்கள் பங்கேற்பதற்கான இடைவெளியை உறுதிசெய்வதென்பது ஜனநாயக நாடொன்றில் காணப்படவேண்டிய மிகமுக்கிய பண்பாகும். 

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பது ஜனநாயகத்தின் இயங்குகைக்கு அவசியமானது எனும் அதேவேளை, அந்த உரிமைக்கான சில மட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன. 

இருப்பினும் அந்த மட்டுப்பாடுகள் அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள சட்டத்தின்முன் அனைவருக்கும் சமளவான பாதுகாப்பு என்ற விடயத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் முரணான வகையில் தன்னிச்சையானவையாக அமையாதிருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கான அங்கீகாரம், சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்திப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால வரலாறு இலங்கைக்கு இருக்கின்றது. 

சர்ச்சைக்குரிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், இரசாயன உர இறக்குமதித் தடைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எதுஎவ்வாறெனினும் கொவிட் - 19 வைரஸ் பரவலைக் காரணமாகக்கூறி, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை மறு அறிவித்தல் வரையில் தடைசெய்வதற்கான அறிவிப்பு கடந்த ஜுலை மாதம் 6 ஆம் திகதி பொலிஸாரால் வெளியிடப்பட்டது. 

அதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் விதிகள் தளர்த்தப்பட்டதன் பின்னரும்கூட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் வகையிலான புதிய வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டதுடன் பொதுக்கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளை நடாத்துவதற்கு முன்னர், அதற்கு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதிபெறுவது கட்டாயமாக்கப்பட்டது. 

கொழும்பில் பாரிய எதிர்ப்புப்போராட்டமொன்றை நடாத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே மேற்படி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. 

அதுமாத்திரமன்றி நவம்பர் மாதம் 16 - 30 ஆம் திகதிவரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன் அதன்படி வெளியரங்கில் நடைபெறும் தனியார் ஒன்றுகூடல்கள் தடைசெய்யப்பட்டன. 

குறிப்பாக அண்மைக்காலங்களில் ஏற்பட்ட கொவிட் - 19 வைரஸ் பரவலுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களே காரணம் என்று பழிசுமத்தும் விதமான கருத்துக்களும் வெளியிடப்பட்டன.

புதிய வழிகாட்டல்களை வெளியிடுவதன் ஊடாக அடிப்படை உரிமைகள்மீது கட்டுப்பாடுகளை விதித்தல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்வதுடன் அவர்களை வலுகட்டாயமாகத் தனிமைப்படுத்தல் என்பன தனிமைப்படுத்தல் சட்டமும் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களும் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றமையை வெளிக்காட்டியுள்ளன. 

அத்தோடு இவை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் தன்னிச்சையாகவும் பக்கச்சார்பான முறையிலும் செயற்படுவதற்கு வாய்ப்பேற்படுத்தியுள்ளன என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.