(இராஜதுரை ஹஷான்)

பெரும்பான்மை பலம் எம் கைகளில் தான் உள்ளது என குறிப்பிட்டுக்கொண்டு பொதுஜன பெரமுனவை சுதந்திர கட்சியால் அடிபணிய வைக்க முடியாது.

அரசாங்கத்துடன் ஒன்றினைந்து செயற்பட முடியாவிடின் தாராளமாக அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என போக்குவரத்துதுறை  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு சுதந்திர கட்சி உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து அரசாங்கத்தையும், கூட்டணியையும் விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

பாராளுமன்றில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றிற்கு தெரிவானதை மறக்கக்கூடாது.

அரசாங்கத்துடன் ஒன்றினைந்து செயற்பட முடியாவிடின் சுதந்திர கட்சியினர் தாராளமாக அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம். அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது நாகரிமற்றது.

2015 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி கொள்கைக்கு முரணாக செயற்பட்டதன் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற அரசியல் ரீதியில் தனித்து செயற்பட்டோம். சுதந்திர கட்சிக்குள் இருந்துக் கொண்டு கட்சியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கவில்லை என்றார்.