(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டிற்கு தேவையான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இதுவரை 45.2 பில்லியன் ரூபா (227மில்லியன் டொலர்கள்) செலவழித்துள்ளதாகவும், பைசர், அஸ்டராசெனிகா, ஸ்புட்னிக்  தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தீர்மானம் எடுத்ததாகவும் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் கொவிட் வைரஸ் நிலைமைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னணி நாடுகளை விடவும் ஆரோக்கியமான மட்டத்தில் நாம் உள்ளோம். மரணங்களை தடுக்கும் நாடுகளின் பட்டியலிலும், தடுப்பூசி ஏற்றும் வேலைதிட்டதிலும் நாம் முன்னணியில் உள்ளோம். 

தடுப்பூசி பெற்றுக்கொள்ள இதுவரை 45.2 பில்லியன் ரூபா (227மில்லியன் டொலர்கள்) செலவழித்துள்ளோம். இதில் பைசர் தடுப்பூசிக்கான நிதியை உலக வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. சைனோபார்ம் தடுப்பூசிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குகின்றது.

அஸ்டராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சித்தோம், ஆனால் இந்தியாவின் நிலைமைகள் காரணமாக அதனை கைவிட்டோம். ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம் ஆனால் ரஷ்யா அதற்கான காலத்தை நீட்டித்தது. அதன் பின்னர் பைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. 

அதனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தருவதாக கூறினர். அதுவரை காலம் எம்மால் காத்திருக்க முடியாத காரணத்தினால் தான் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பேசி ஒரு தடுப்பூசியை 7 டொலர் பெறுமதியில் பெற்றுக்கொண்டார் என தெரிவித்தார்.