(க.கிஷாந்தன்)

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை - பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்டத் தொழிலாளியின் வீட்டில் நேற்று 30.11.2021 மாலை 6 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன் ரெகுலேட்டரின் துண்டுகளைக் கூட அப்பகுதியில் காண முடியவில்லை மேலும் அதற்கான இறப்பர் குழாயும் முழுமையாக எரிந்துள்ளது.

தோட்ட தொழிலாளிகளான பெற்றோர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் பிள்ளை தண்ணீரை சூடாக்குவதற்கு சமையல் அறையில் இருந்த எரிவாயு அடுப்பை பற்றவைத்து விட்டு வீட்டினுள் இருந்த போது பாரிய சத்தத்துடன் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

எரிவாயு அடுப்பு வெடிப்பு மற்றும் தீப்பற்றல் காரணமாக எரிவாயு குக்கர் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின் கட்டமைப்பு மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளன.

சமையலறையில் எவரும் இல்லாததன் காரணமாக எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்வனவு செய்யப்பட்ட கேஸ் சிலிண்டரே இவ்வாறு வெடித்துள்ளது.

குறித்த நேரத்தில் பெற்றோரும் வீடு திரும்பிய நிலையில் கேஸ் சிலிண்டரை தந்தை தூக்கி வெளியில் வீசி எறிந்ததால் எற்படவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒன்றுகூடிய அயலவர்களும் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக குறித்த பகுதிக்கான கிராம உத்தியோகத்தருக்கும் திம்புள்ள - பத்தனை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.