ரன்வீர் சிங்கின் '83' முன்னோட்டம் வெளியீடு

Published By: T Yuwaraj

01 Dec, 2021 | 11:18 AM
image

பொலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் முதன்மை நாயகனாகவும், கோலிவுட் நடிகர் ஜீவா கதை நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருக்கும் '83' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பொலிவுட் இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் '83'. இந்திய துடுப்பாட்ட அணி 1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற வரலாற்று நிகழ்வையும், அதன் பின்னணியில் இந்திய அணி வீரர்கள் எதிர்கொண்ட நெருக்கடி மற்றும் பொறுப்புணர்வை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம் இது. 

இதில் இந்திய துடுப்பாட்ட அணியின் கப்டனாக இருந்த கபில்தேவ் கதாபாத்திரத்தில் பொலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கும், அந்த அணியில் இடம்பெற்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவாவும், கபில் தேவின் மனைவி ரோமி கபில்தேவ் கதாபாத்திரத்தில் பொலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவும் நடித்திருக்கிறார்கள். அஸீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜூலியஸ் பக்கிம் இசை அமைத்திருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

83 திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசனின் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் தயாரிப்பாளர் சசிகாந்தின் விநியோக நிறுவனமான வைநாட்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

1983ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உணர்ச்சிகரமான விளையாட்டுப் போட்டியை மீண்டும் சுவாரசியம் குறையாமல் திரைப்படமாக உருவாக்கப் பட்டிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்