மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு முன்பாக இன்று காலை பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும் என்னும் தலைப்பில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனியிடம் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த மகஜரில்,

நாங்கள் போரதீவுப்பற்று பிரதேச சபையில் ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிக மற்றும் பதிலீட்டு ஊழியர்களாகக் கடைமையாற்றி வருகின்றோம் என்பது தாங்கள் அறிந்ததே,

இச்சபையுடைய வருமானம். சேவை மற்றும் ஏனைய ஒவ்வொரு செயற்பாடுகளிலும் எமது சேவைகள் அளப்பெரியது நாங்கள் எந்த நிலைமைகளிலும் காலம் நேரம் பாராது முழுமனதுடன் சேவையாற்றுவதுடன் சூழல் சுத்திகரிப்பு மற்றும் அனர்த்த நிலைமை காலங்களிலும் தற்போதைய கொவிட்-19 கொடும் தொற்றுநோய் நிலைகளிலும் எமது சுகாதாரத்தினையும் உயிரையும் துச்சமாக மதித்து பொதுநல செயற்பாடுகளில் இப்பிரதேச சபையுடன் ஒன்றிணைந்து பாடுபட்டு உழைத்து வருகின்றோம்.

 

அத்துடன் மாதாந்த குறைந்த ஊதியத்தினை பெற்று வருகின்றபோதிலும் இப்பிரதேச சபையின் சேவை. முன்னேற்றம் அபிவிருத்தி போன்றவற்றிற்கு அயராது உழைக்க தவறியதேயில்லை.

எமது ஒவ்வொரு ஊழியர்களினதும் குடும்பம் எங்களது குறைந்த மாதாந்த வருமானத்தைக் கொண்டு தற்பொழுது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்புக்கு முகம்கொடுத்து வாழ வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் நாங்கள் 6 வருடங்களுக்கு மேல் இவ்வாறு பாரிய சேவையை இச்சபைக்கு வழங்கியபோதிலும் இன்றுவரை எங்களுக்கான எந்தவித நிரந்தர நியமனமும் வழங்கபடாமையினால் எங்களை புறக்கனிப்பதாக உணர்வதுடன் உளரீதியான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளோம் அத்துடன் எங்களில் மாறுபட்ட வயது உடையவர்களுக்கு இன்னும் கால நீடிப்பினால் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் நிலை எற்படும்

என்பதனையும் தங்களின் மேளான கவனத்துக்கு அறியத்தருகின்றோம்.

ஆகவே எமது நிலைமையையும் தங்களது கவனத்தில் கொண்டு வயது மற்றும் எதிர்காலநன்மை கருதி எங்களுக்கு நிரந்தர நியமனத்தை மிக விரைவாக பெற்றுத் தருமாறுதங்களைப்பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். என மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.