நாட்டின் பல்வேறு தமிழ்ப்பத்திரிகைகளிலும் பணிபுரிந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகும் 'உதயன்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான எம்.வி.கானமயில்நாதனின் மரணத்திற்கு  இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கானமயில்நாதன் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். இதுபற்றி இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அஞ்சலிக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

நாட்டின் பல்வேறு தமிழ்ப்பத்திரிகைகளிலும் பணிபுரிந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகும் 'உதயன்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான எம்.வி.கானமயில்நாதனின் மரணம் தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உதயன் பத்திரிகை 1985 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சுமார் 36 வருடகாலம் அதன் ஆசிரியராகப் பணியாற்றிய கானமயில்நாதன் யாழ்ப்பணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவராவார்.

வரையறுக்கப்பட்ட சுயாதீன பத்திரிகை நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்ட 'தினபதி' பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்த கானமயில்நாதன், 'வீரகேசரி' பத்திரிகையிலும் குறுகியகாலம் பணியாற்றினார்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்த கானமயில்நாதன் துணிச்சலுடன் தனது பணியைத் தொடர்ந்ததுடன் வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயற்பட்டார். அப்போதைய சூழ்நிலையை உரியவாறு கையாண்ட அவர், தமிழ் மக்களுக்காக அளப்பெரிய சேவையாற்றினார்.

ஊடகத்துறையில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு சேவையாற்றி கானமயில்நாதன், 2009 ஆம் ஆண்டில் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினால் வழங்கப்பட்ட உயர்சேவைக்கான விருதினைப் பெற்றுக்கொண்டார்.

அதுமாத்திரமன்றி ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பில் வழங்கப்படுகின்ற சேபால குணசேன விருதை கானமயில்நாதன் ஆசிரியராக இருந்த காலப்பகுதியில் உதயன் பத்திரிகை தன்வசமாக்கிக்கொண்டது.

இந்நிலையில் கானமயில்நாதனின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நாம் எமது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.