தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்பாடுகளை தயாரிக்கும் சட்டங்களை வகுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதற்காக சுதந்திரமானதும் நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) அரசாங்கத்தை பாராட்டியுள்ளது.

தேர்தல் முறை திருத்தம், செலவுக் கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான செலவினக் கட்டுப்பாடுகள் தொடர்பான சட்டங்களும் ஒழுங்குகளும் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பெப்ரவல் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

தேர்தலின் போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைக் குறைப்பதற்காகவும், ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காகவும் தற்போதுள்ள கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கு, 2017 ஒக்ரோபர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் கட்டமைப்பு மற்றும் சட்ட ஒழுங்களுக்கமைய மறுசீரமைப்புக்களை அடையாளங் கண்டு, திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழுவால் குறித்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி, உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை திங்களன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.