தமிழ் திரை உலகில் 'வளரும் சூப்பர் குட் பிலிம்ஸ்' என்ற நன்மதிப்பை பெற்றிருக்கும் பட தயாரிப்பு நிறுவனமும், 'மரகதநாணயம்', 'ராட்சசன்', 'ஓ மை கடவுளே' என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்திருக்கும் பட தயாரிப்பு நிறுவனமுமான ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில், அதன் தயாரிப்பாளர் டில்லிபாபு புதிதாக தயாரித்திருக்கும் 'பேச்சுலர்' படத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பயன்படுத்தாத வகையில் பின்னணி கலைஞர்களின் உழைப்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'பேச்சிலர்'. இந்தப் படத்தில் 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை திவ்யபாரதி நடித்திருக்கிறார். 

இவர்களுடன் முனிஸ்காந்த், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், தனம்மாள், கொற்றவை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசை அமைத்திருக்கிறார்.

டிசம்பர் 3ஆம் திகதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை பற்றி தயாரிப்பாளர் டில்லி பாபு பேசுகையில், ''மூன்றாண்டு உழைப்பிற்கு பிறகு இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. 

படத்தின் இயக்குநரான சதீஷ் செல்வகுமார் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப்படத்தின் பின்னணி பேசும் பணி மட்டும் 880 மணிநேரம் நடைபெற்றிருக்கிறது. 

இயக்குநர் கதாபாத்திரத்திற்காக உடல் மொழியுடன் பேச்சு மொழியாக நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காக ஒலி அமைப்பில் எந்தவித சமரசமும் இல்லாமல் உழைத்திருக்கிறார். 

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராகவும், கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும் வெற்றிகரமாக பயணித்து வரும் ஜீ. வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த 'பேச்சுலர்' படம் திருப்புமுனையாகவும், முத்திரை பதித்த படைப்பாகவும் இருக்கும். 

இன்றைய இளைய தலைமுறையினர் காதலை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதை இயக்குநர் அனைவரும் ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.'' என்றார்.

இதனிடையே தயாரிப்பாளர் டில்லிபாபு இதற்கு முன் தயாரித்து வெளியிட்ட ஆறு திரைப்படங்களில் ஐந்து திரைப்படங்களை புதுமுக இயக்குநர்கள் இயக்கி இருக்கிறார்கள் என்பதும், தற்போது தயாரிப்பில் இருக்கும் ஆறு திரைப்படங்களையும் புதுமுக இயக்குநர்கள் இயக்கி வருகிறார்கள் என்பதாலும் தமிழ் திரையுலகினரும், இளம் படைப்பாளிகளும், இந்நிறுவனத்தை 'வளரும் சூப்பர் குட் பிலிம்ஸ்' என குறிப்பிடுகிறார்கள் என்பதும்,' பேச்சுலர் ' படத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பேசும் பேச்சு மொழியை படத்தின் கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.