பல சுகாதார தொழிற்சங்கங்கள் வாகனப் பேரணி ! தீர்வு இன்றேல் வீதிக்கு இறங்குவோமென எச்சரிக்கை

30 Nov, 2021 | 04:22 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் சுகாதார தரப்பினரின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை வழங்காமை மற்றும் சம்பளம் அதிகரிக்கப்படாமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து 30 க்கும் மேற்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய 'சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு' செவ்வாய்கிழமை (30) கொழும்பில் வாகனப் பேரணியூடாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

பதவி நிலை உரிமையை உறுதிப்படுத்துவதற்குரிய சுற்றுநிருபம் வெளியிடப்படாமை, 12 வருடங்களில் முதலாம் வகுப்பைப் பெற்று தரமுயர்த்தும் திட்டத்திற்கமைவாக பரிபூரண வைத்திய, துணை வைத்திய உத்தியோகத்தர்களுக்காக   சுற்றுநிருபம் வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதம் , முரண்பாடுகளை நீக்கும் வகையில் 2010/10/01 திகதி வரை முன்தேதியிடுவதற்கான தீர்மானத்திற்கு  அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளாமை, சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்த 'றணுக்கே சம்பள குழு ' அறிக்கையை இதுவரை நடைமுறை படுத்தாமை,

விசேட கடமை கொடுப்பனவை ரூபா 10000 ஆக உயர்த்துதல், மேலதிக நேரக் கொடுப்பனவை சகல உத்தியோகத்தர்களுக்கும் அடிப்படை சம்பளத்தின் 1/80 ஆக நிர்ணயித்தல், சுகாதார உத்தியோகத்தர்களின் பட்டதாரிகளுக்கான சம்பளத்திட்டத்தை உருவாக்கல் அதற்குரிய பதவி/தொழில் சந்தர்பங்களை வழங்கல், சகல சுகாதார உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய 'இலங்கை சுகாதார நிர்வாக சேவை' ஒன்றை உருவாக்கல், வேலை நிறுத்த காலத்தில் உயிர்காக்கும் அத்தியாவசிய சேவைகளை உரிய நிறுவனங்களில் வழங்கல் என்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது இந்த கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் தினங்களில் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் வீதிக்கு இறங்கி போராடுவர் என்றும் இந்த தொழிற் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பு, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரச தாதி அதிகாரிகள் சங்கம் , அரச இரசாயன ஆய்வுகூடட ஊழியர் சங்கம், மருந்தகங்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள், குடும்ப நல சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை சார் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள 'சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு' இந்த வாகனப் பேரணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கொழும்பு - விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் கொழும்பு மாநகரசபைக்கு முன்னாள் முற்பகல் 11 மணியளவில் வாகனப் பேரணி ஆரம்பமானது. அதனையடுத்து யூனியன்பிளேஸ் வீதியூடாக சுகாதார அமைச்சு , கோட்டை வரை சென்று மீண்டும் விகாரமாதேவி பூங்காவில் பேரணி நிறைவடைந்தது.

பேரணி நிறைவடைந்த பின்னர் தொழிற்சங்க தலைவர்கள் ஊடங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டனர் :

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கையில் ,

இது திடீரென தோன்றி பிரச்சினை அல்ல. அமைதியாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கப் போவதில்லை என்று அரசாங்கமும் சுகாதார அமைச்சும் தவறான முன்னுதாரணத்தைக் காண்பித்துள்ளன. 

தொழிற்சங்கங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதற்கு நான் தயாராக இல்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் அவருடன் விளையாடி எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அந்த விளையாட்டின் ஆரம்பத்தை இன்று நாம் காண்பித்துள்ளோம். வெகுவிரைவில் எமது விளையாட்டுக்களுக்கு அப்பால் சுகாதார அமைச்சருக்கு அவரது பதவியும் பறிபோகக் கூடிய நிலைமை ஏற்படும் என்று எச்சரிக்கின்றோம். எமது பிரச்சினைக்கு துரித தீர்வினை வழங்காவிட்டால் எதிர்வரும் தினங்களில் 50 000 க்கும் மேற்பட்ட சுகாதார தொழிற்சங்கத்தினர் வீதிக்கு இறங்குவர் என்றார்.

சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பு

சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில் , '  சுகாதாரத்துறை அமைச்சு மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் இன்றைய தினம் இடம்பெறுகிறது. எவ்வாறிருப்பினும் இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் எந்தவொரு தொழிற்சங்கத்தினருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எமது கோரிக்கைகள் தொடர்பில் செவி சாய்ப்பதற்கு நேரம் இல்லை. எனினும் உலகிலுள்ள ஏனைய விடயங்களையும் செவிமடுப்பதற்கு மாத்திரம் அவருக்கு நேரம் இருக்கிறது. சுகாதார அமைச்சரும் இது தொடர்பில் கலந்துரையாடவில்லை. வரவு - செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையும் ராஜபக்ஷ சம்பிரதாயமும் இம்முறை இல்லாமல் போயுள்ளது.

கொவிட் தொற்றின் காரணமாக நாம் எமது கோரிக்கைகளை புறந்தள்ளி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல் தொடச்சியான சுகாதார சேவையை வழங்கினோம். எனினும் அரசாங்கம் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எமது கோரிக்கைகளை முற்றாக மறந்து வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது என்றார்.

அரச தாதி அதிகாரிகள் சங்கம்

அரச தாதி அதிகாரிகள் சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவிக்கையில் , ' எமது கோரிக்கைகளுக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் சகல சேவைகளையும் இடைநிறுத்துவோம். எமது அதனை விடுத்து மாற்று வழி கிடையாது. இந்த வாகனப் பேரணியை ஆரம்பிப்பதன் ஊடாக தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தையும் , அதிகாரிகளையும் வலியுறுத்துகின்றோம். நீண்ட கால சம்பள முரண்பாடு உட்பட சுகாதார தொழிற்சங்கத்தினருக்கு பல பிரச்சினைகள் உள்ளன. தாதி பட்டதாரிகளுக்கு உரிய பதவிகளோ அங்கீகாரமோ வழங்கப்படுவதில்லை. இதற்கான தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47
news-image

நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய...

2022-09-29 11:23:39
news-image

கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை...

2022-09-29 11:17:21