(இராஜதுரை ஹஷான்)

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி  செயலணிக்கு புதிதாக மூன்று உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். செயலணிக்கு தமிழ், முஸ்லிம் பிரநிதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

அதற்கமைய நில அளவையாளர் நாயகம் ஆரியரத்ன திஸாநாயக்க , ஓய்வுப் பெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், விரிவுரையாளர் முபிசால் அபூபக்கர் ஆகியோர் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட நில அளவை திணைக்களத்தின் நாயகம் எஸ்.பி. தென்னகோன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் செயலணியின் உறுப்பினர் கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும் என இனங்காணப்பட்டதற்கமைய கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி திருத்தம் செய்யப்பட்டு ஜனாதிபதி செயலாளரினால் நேற்று முன்தினம் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி உருவாக்கினார்.

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்யும் செயலணி நியமிக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன தலைமையிலான ஜனாதிபதி செயலணியில் தொல்பொருள் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த நாயக்க தேரர், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களினதும் மற்றும் தமன்கடுவ பிரதேசத்தின் பிரதம சங்கநாயக்க அரிசிமலே ஆரணியத்தின் சேனாசனாதிபதி பனாமுரே திலகவங்க நாயக்க தேரர்,

ஸ்ரீ ரத்னபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர் - அஸ்கிரிய பீடம், கலாநிதி மஹமுனே சுமங்கல தேரர் - மல்வத்து பீடம், மெதகம தம்மானந்த தேரர்- அஸ்கிரிய பீடம், அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் -மல்வத்து பீடம், பேராசிரியர் கபில பெரேரா- புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க –தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்,கீர்த்தி கமகே –காணி ஆணையாளர் நாயகம், எஸ்.பி.தென்னகோன்- நில அளவையாளர் நாயகம்,பேராசிரியர்  ராஜ்குமார் சோமதேவ,தேசபந்து தென்னக்கோன் -சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்(கிழக்கு மாகாணம்,திலிப் ஜயவீர –தெரண ஊடக வலையமைப்பு,மேஜர் ஜெனரால் (ஓய்வு) என்.ஆர் லமாஹேவகே  ஆகியோர் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதினால் செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட நில அளவை திணைக்களத்தின் நாயகம் எஸ்.பி. தென்னகோன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் செயலணியின் உறுப்பினர் கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும் என இனங்காணப்பட்டதால் ஆரியரத்ன திஸாநாயக்க – நில அளவையாளர் நாயகம், ஏ பத்திநாதன் -ஓய்வுப்பெற்ற மாகாண பிரதம செயலாளர்,விரிவுரையாளர் முபிசால் அபூபக்கர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தினுள் காணப்படும் தொல்பொருள் ரீதியிலான புராதான இடங்களை அடையாளம் காணல்,அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் மீள் நிர்மாணித்தல்,அத்தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காகக் பொருத்தமான நடைமுறைகளை இனங்காணல் மற்றும் அவற்றை செயல்படுத்தல், தொல்பொருள் இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவை அடையாளம் காணல், குறித்துரைக்கப்பட்ட மற்றும்; சட்டரீதியாக அவ்விடங்களை ஒதுக்குவதற்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் தொல்பொருள் ரீதியான பெறுமதி வாய்ந்த இடங்களின் கலாசாரப் பெறுமதிகளை பாதுகாத்து இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பிரசாரம் செய்தலும், குறிப்பிடப்பட்ட மரபுரிமைகளை மேம்படுத்துவதற்காக சிபாரிசுகளை சமர்ப்பித்தலும் ஜனாதிபதி செயலணியின் பணிகளாகும்.