குமாரதாஸ் மாப்பாண முதலியாரும் நல்லூரின் சமத்துவவாத பாரம்பரியமும் - ராதிகா குமாரஸ்வாமி

Published By: Digital Desk 3

03 Dec, 2021 | 11:15 AM
image

நாதஸ்வரத்தின் மிகவும் இதமான ஒலி காற்றில் கலந்திருக்கின்றது. மனதின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கின்ற அதன் எதிரொலி நியூயோர்க் நகரத்தின் இருண்ட பகுதிகளில் வியாபிக்கின்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து அநேக இசைக்கலைஞர்கள் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருகைதந்து ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக்கொண்டு தமது கலைத்திறமையை வெளிக்காட்டுகின்ற நாள் அது. 

மாலையில் பச்சைநிற ஆடையில் அலங்கரிக்கப்பட்டிருக்கின்ற முருகப்பெருமானை அவரது தோள்களில் தவழும் பூக்களுடன் காவிச்செல்வார்கள். சிறுவயதில் நான் பார்த்த இந்தக்காட்சிகள் இசையையும் நடனத்தையும் ஒருங்கே ஆழமாக வேரூன்றச்செய்தன.

எனது பாட்டியும் அவரது தயாரும் வாழ்ந்த இடமே சிறுபராயத்தில் எனது சகோதரர்களின் வீடாக இருந்தது. எனவே ஒவ்வொரு பாடசாலை விடுமுறையையும் நல்லூரில் அவர்களுடன் கழிப்பது வழக்கமாக இருந்தது. நன்கு வசதிவாய்ப்புள்ளவர்களுக்கு யாழ்ப்பாணம் என்பது பெரும்பாலும் தாய்வழி இடமாகவே காணப்பட்டது. 

வரதட்சணையாக வழங்கப்படுகின்ற பெருமளவான சொத்துக்கள், தமது கணவர்களுக்கும் மேலான அதிகாரத்தையும் வளமான வாழ்வையும் பெண்களுக்கு நல்கின. ஒருகாலத்தில் கிராமசேவகராகவும் புதுடில்லியில் உயர்ஸ்தானிகராகவும் இருந்த எனது பாட்டனாரின் அனைத்துப் பணிகளும் வீட்டின் முகப்பு அறையில் (வராண்டா) இடம்பெறும் அதேவேளை, அருகிலுள்ள அறையில் எனது பாட்டியும் அவரது தயாரும் அமர்ந்து மக்களுடன் தொடர்புடைய விவகாரங்களைப் பார்த்துக்கொள்வார்கள். 

யார் யாரைத் திருமணம்செய்துகொள்வது? வரதட்சணையாக எவ்வளவு சொத்துக்களைப் பெறுவது? புதிதாக மேற்கொள்ளப்பட்ட காணி கொள்வனவுகள் என்ன? சமூகத்திலுள்ள பிளவுகளை களைவது எப்படி? பாரம்பரியங்களை எவ்வாறு பாதுகாப்பது? கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் தினமும் எவற்றைச்செய்யவேண்டும்? உள்ளிட்ட பல்வேறு விடங்கள் அவர்களாலேயே தீர்க்கப்படும்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் அமைந்திருந்த வீதியின் கீழ்ப்பகுதி குறிப்பாக எனது பாட்டி உள்ளிட்ட எனது குடும்பத்திலுள்ள பெண்களால் முன்னரேயே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அக்கோவில் எவ்வாறு புனரமைக்கப்பட்டது? அதனை எப்படி மேலும் மெருகூட்டுவது? என்ற கதைகளை எனது இளம்பராயத்தில் கேட்டு வளர்ந்திருக்கிறேன்.

எனது பாட்டியும் அவரது தாயாரும் மேலும் பல நல்லூர்வாசிகளுடன் இணைந்து கோவிலை மீட்டெடுக்கப்போகின்ற இளம் வாலிபனாக குமாரதாஸ் மாப்பாண முதலியாரைக் கருதினார்கள். குமாரதாஸ் என்று பேரன்புடன் அழைக்கப்பட்ட அவர், நல்லூர் பரம்பரையின் இரண்டாவது வாரிசு ஆவார். 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியிலும் கல்விபயின்ற அவர், மருத்துவத்துறையிலே உயர்கல்வியைப் பெறவிரும்பினார். இருப்பினும் நல்லூர்வாழ் பெண்கள் ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். 

1964 ஆம் ஆண்டில் அவரது சகோதரர் உயிரிழந்த பின்னர், நல்லூர் ஆலய நிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட குமாரதாஸ், கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி தனது உயிர்பிரியும் வரையில் ஆலய நிர்வாகத்தை முறையாக வழிநடத்தினார்.

முதலில் ஆலய நிர்வாகத்தைக் கொண்டுநடாத்துவதற்காக அறிவியல் ரீதியில் துல்லியமானதும் தெளிவானதுமான திட்டமொன்றை குமாரதாஸ் அறிமுகப்படுத்தினார். இரவுநேரத்திலும் உரிய வேளைகளில் பூஜைகளும் சடங்குகளும் நடைபெற்றன. 

குமாரதாஸ் அனைத்து விடயங்களிலும் நேர்த்தியான தன்மையையும் துல்லியத்தையும் விரும்புபவராக விளங்கினார். அவர் ஆலய பூசகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் மிகுந்த பக்தியுடன் இருப்பதை உறுதிப்படுத்தினார். வெகுவிரைவிலேயே நல்லூரும், யாழ்ப்பாணமும் ஒட்டுமொத்த இலங்கையும் அதற்கான பிரதிபலிப்பைக் காண்பிக்கத்தொடங்கியது. நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்வடைந்ததுடன் 1980 ஆம் ஆண்டளவிலே வடமாகாணத்தின் முன்னணி ஆலயமாக மாறியது. 

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தையடுத்து, குமாரதாஸ் ஆலயத்தில் கட்டமைப்பு ரீதியான புத்தாக்கங்களை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தினார். அதன்படி ஆலயவாசல் விரிவாக்கப்பட்டதுடன் மேலும் பல குறிப்பிடத்தக்களவிலான மாற்றங்கள் செய்யப்பட்டன. என்னுடைய நண்பர் ஒருவர் நல்லூர் கந்தசுவாமி கோவிலை 'வடக்கின் வத்திக்கான்' என்று குறிப்பிடுவார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கவில்லை. இருப்பினும் குமாரதாஸின் செயற்திறன்மிக்க சிறப்பான நிர்வாகத்தினால் உலகம் முழுவதிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருகைதந்தார்கள். 

போருக்கு மத்தியிலும் ஆலயத்தின் மீதிருந்த நம்பிக்கை சீர்குலையவில்லை. நல்லூர் முருகப்பெருமானுக்கும் கதிர்காமக்கந்தனுக்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்த பாதுகாப்புத்தரப்புத்தரப்புப் பிரதிநிதிகளும் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாட்டார்கள்.

ஆலயத்தின் இந்த மாறுதல்களில் குமாரதாஸின் மனைவி சுகிர்தா நமசிவாயம் மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கியவராவார். அவரது தலைமுறையில் மிகவும் அழகான, திறமையான பெண்ணான சுகிர்தா, ஆலய விழாக்களின்போது பயன்படுத்தக்கூடிய துணிவகைகள் மற்றும் அலங்காரப்பொருட்களைத் திட்டமிடுவதில் தனது பங்களிப்பை வழங்கினார். பூசகர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள ஏனைய ஆலயங்களுக்குச்சென்று பயிற்சி பெற்றுக்கொண்டார்கள்.

நல்லூர் ஆலயமென்பது குமாரதாஸின் வாழ்நாள் வேட்கையாகும். அவர் தனது 90 வயதிலும், குறிப்பாக அவர் மரணிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னரும்கூட வெள்ளை வேட்டியும் சால்வையும் அணிந்து ஆலயத்திற்கு வருகைதந்து, அங்கு அமர்ந்திருந்தார். மிகவும் ஒழுக்கமான அந்த மனிதரின் எளிமை நம்மனைவருக்குமான மிகச்சிறந்த முன்னுதாரணமாகும்.

சில குழுக்களும் அமைப்புக்களும் இணைந்து 'அனைவரையும் உள்வாங்காத' ஓர் இடமாக நல்லூரை மாற்றியமைப்பதற்கு முயற்சிப்பதாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த சில கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மிகுந்த கவலையளிக்கின்றது. மாறுபட்ட வரலாற்றைக்கொண்ட நல்லூர் கோவில், 'சமத்துவமான கலாசாரத்தை' பின்பற்றிய கோவில் என்ற அடிப்படையிலும் அதன் பெயரை நிலைநாட்டியுள்ளது.

எனது தந்தை ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதையடுத்து, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சர்வதேச பாடசாலையில் நான் ஐந்தாம் தரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்தேன். அங்கு நாம் உலகளாவிய ரீதியிலுள்ள மதங்கள் தொடர்பில் கற்றதுடன் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியரொருவர் எமக்கு இந்துமதம் பற்றிக் கற்பித்தார். 'இந்துமதம் அதன் சாதியக்கட்டமைப்பினால் பெயர் பெற்றிருக்கின்றது. 

அதுவே ஏனைய மதங்களிலிருந்து இந்துமதத்தை வேறுபடுத்துகின்றது' என்று கூறிய அவர், சாதியக்கட்டமைப்பு தொடர்பில் விபரித்தார். அவருக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த கோபத்தினால் உண்டான அழுகையுடன் அவர் பொய்யான விடயங்களைக் கற்பிக்கின்றார் என்று அவரிடமே கூறினேன். 

அதனையடுத்து நான் அதிபர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டேன். அவர்கள் எனது தந்தையை வருகைதந்து, என்னை வீட்டிற்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார்கள். அவருடன் வீட்டிற்குச் செல்லும்போது, ஆசிரியர் கூறியதைப்போன்ற சாதியக்கட்டமைப்பு இன்னமும் நடைமுறையில் இருப்பதாகக்கூறி அவர் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

அதுமாத்திரமன்றி இந்திய தேசியவாத இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட அவரது தலைமுறையினர் இந்த வெட்கக்கேடான வரலாற்றிக்கு எதிராகப்போராடும் உத்வேகத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

காந்தியின் சீடரான எனது பெரிய மாமா எஸ்.சோமசுந்தரமும் குமாரதாஸின் தந்தையும் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய முற்போக்குக் குழுக்களுடன் இணைந்து தலித்துக்களை அழைத்துக்கொண்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குள் நுழைந்தது பற்றியும் எனது தந்தை குறிப்பிட்டார். 

இவற்றை எனது கொள்ளுப்பாட்டியின் அனுமதியின்றி நிச்சயமாகச் செய்திருக்கமுடியாது. செல்வி திருச்சந்திரன் சாதியக்கட்டமைப்பு தொடர்பில் அண்மையில் எழுதியுள்ள புத்தகத்தில், அனைத்து பக்தர்களுக்கும் அதன் கதவுகளைத் திறந்த கோவில்களில் நல்லூர் முதன்மையானது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

இந்த சமத்துவவாத கலாசாரத்தை குமாரதாஸ் நன்கு புரிந்துகொண்டார். அதன்படி கோவிலுக்குள் நுழையும் ஆண்கள் மேலங்கியை அணியக்கூடாது என்ற நடைமுறையைக் கடைப்பிடித்தார். மரியாதையின் நிமித்தம், சாதி மற்றும் வர்க்கவேறுபாடுகளின் அடையாளங்களை நீக்கி கடவுளுக்கு முன்னாள் அனைவரும் சமமாக இருப்பதை உறுதிசெய்வதே அதன் நோக்கமாகக் காணப்பட்டது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தை குமாரதாஸ் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து தற்போதுவரை அர்ச்சனைக்கான கொடுப்பனவு ஒரு ரூபாவாகவே பேணப்பட்டுவருகின்றது. ஏழைகள் உள்ளடங்கலாக அனைவரும் அர்ச்சனைக்கான வாய்ப்பைப் பெறவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக நல்லூரின் கதவுகள் திறக்கப்பட்டதுடன் அதன் நிர்வாகம் சமூகத்தைக் காப்பதில் அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தது.

குமாரதாஸ் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முற்பட்ட காலத்திலும், 1920 ஆம் ஆண்டளவில் நல்லூர் கோவில் ஊடாக புதிதாகக் கண்டறியப்பட்ட இந்துமத மரபுகள் யாழ்ப்பாண மக்களுக்குப் போதிக்கப்படுவதாகக் கருதிய ஆறுமுக நாவலரைச் சார்ந்தவர்களால் கோவில் அறங்காவலர்கள் மற்றும் பூசகர்கள் தாக்கப்பட்டனர். 

கோவிலில் 'வேல்' வைத்து வழிபாடு செய்வது நாவலரின் உரை ஆகம முறைகளுக்குப் பொருந்தாதன் காரணமாக அதனை அகற்றவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் 'வேல்' என்பது யாழ்மக்கள் எப்போதும் வழிபடுகின்ற ஓர் விடயமாக இருந்துவருவதாகக்கூறி அதனை அகற்றுவதற்குக் கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது.

ஆலயங்களின் நிலைத்த தன்மை என்பது அவற்றின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலானதாகும். அவை சமூகத்தினதும் பக்தர்களினதும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. 

குமாரதாஸின் மகனான ஷயன் இப்போது ஆலயநிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கின்றார். அவரும் அவரது துணைவியும் இணைந்து 21 ஆம் நூற்றாண்டின் சவால்களைத் திறம்பட எதிர்கொண்டு, ஆலயத்தின் பாரம்பரியத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்வர் என்பதை நாமறிவோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48