புதிய வகை கொரோனா  வைரஸான ஒமிக்ரோன் உலகளாவிய ரீதியில் அதிகளவு பரவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த மாறுபாடு சில பகுதிகளில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரான வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதற்கான உலகளாவிய உந்துதலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கொரோனா "எங்களுடன் முடிவடையவில்லை" என அவர் எச்சரித்தார்.

புதிய வகை கொரோனா மாறுபாடு  தென்னாபிரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.

இது அதிக தொற்று அபாயத்தைக் கொண்டிருப்பதாக ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்கா  புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக  உடனடியாக அறிக்கை செய்ததற்காக பாராட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம்,போட்ஸ்வானா, கனடா, செக் குடியரசு, டென்மார்க்,ஜேர்மனி, ஹொங்கொங், இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துக்கல்,தென் ஆபிரிக்கா,ஸ்பெயின், சுவீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய 17 நாடுகளில் ஓமிக்ரோன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா, மற்றும் அமெரிக்கா ஆகியவை தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடையை விதித்தன. 

இந்த முடிவை தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா விமர்சித்தார். அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான் தமது எல்லைகளை இன்று முதல் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது, அதே நேரத்தில் அவுஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

விசா வைத்திருக்கும் சர்வதேச மாணவர்கள் மற்றும் திறமையான பணியாளர்களுக்கான அவுஸ்திரேலியாவுக்கான பயணம் புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட இருந்தது, ஆனால் தற்போது டிசம்பர் 15 வரை தாமதமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேலும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.