இந்தியாவில் இருந்து எரிவாயு சிலிண்டரை கொண்டுவர திட்டமா ? -  ரஞ்ஜித் மத்தும பண்டார கேள்வி

By T Yuwaraj

30 Nov, 2021 | 06:38 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

எரிவாயு வெடிப்பினால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட் சேதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அதனால் மக்களின் உயிருடன் விளையாடாமல் அரசாங்கம் இதுதொடர்பாக உடனடியாக தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். 

Articles Tagged Under: ரஞ்சித் மத்தும பண்டார | Virakesari.lk

அத்துடன் காஸ் சிலிண்ர் வெடிப்பு இந்தியாவில் இருந்து காஸ் சிலிண்டர் கொண்டுவருவதற்கான திட்டமாக இருக்கலாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு  மற்றும் வலுசக்திஅமைச்சு ஆகியவற்றின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் காஸ் சிலிண்டர் ஒன்றை வீட்டில் வைத்திருக்க அச்சப்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. தற்போதுள்ள காஸ் சிலிண்டரின் கலவையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் வெடிப்பு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவி்த்து வருகின்றனர். 

அதனால் இந்த விபத்தை நிறுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் என்ன என்பதை கேட்கின்றோம். கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் காஸ் கசிவு ஏற்பட்டு வெடிப்பு ஏற்பட்டிருக்கி்ன்றது.

இதனால் உயிர் சேதம் உட்பட பொருட் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. குறுகிய தினங்களில் இந்தளவு காஸ் சிலிண்டர்கள் வெடித்தது தொடர்பில் நாங்கள் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை.

அதனால் இந்த பிரச்சினையில் இருந்து அரசாங்கம் நலுவிச்செல்லாமல் முறையான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் சமையல் எரிவாயு விலை  இந்த அரசாங்க காலத்திலும் உலக சந்தையில் கூடி, குறைந்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் உலக சந்தையில் எரிவாயு விலை குறையும்போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் விலை அதிகரிக்கும்போது எரிவாயு விலையை அதிகரித்து வந்திருக்கின்றது.

நாங்கள் 2015இல் ஆட்சிக்கு வரும்போது காஸ்விலை 2313ரூகாவுக்கே இருந்தது. அதனை நாங்கள் ஆயிரத்தி 342ரூவுக்கு குறைத்தோம். எமது நான்கரை ஆட்சி காலத்தில் காஸ்விலையை அதிகரிக்காமல் பாதுகாத்துவந்தோம். ஆனால் அரசாங்கம் காஸ்விலையை 2ஆயிரத்தி 675ரூபாவரை அதிகரித்திருக்கின்றது.

மேலும் தேசிய பாதுகாப்புக்கு பெரிதும் அச்சறுத்தலாக இருக்கும் கெரவலப்பிடிய திறவ இயற்கை  எரிவாயு விநியோகத்தை அரசாங்கம் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருக்கின்றது.

இதுதொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் யாருக்கும் தெரியாது. அதனால் அமெரிக்க நிறுவனத்துடன் செய்துகொண்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்போகின்றது என்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும். 

அதேபோன்று அமைச்சரவைக்கும் இந்த ஒப்பந்தத்தை சமர்ப்பிக்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. எந்தவித கேள்வி கோரலும் இல்லாமலே யுகனவிய மின் உற்பத்தி நிலையம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதனால் எதிர்வரும் 10வருடங்களுக்கு உலக சந்தையில் காஸ் விலை குறைந்தாலும் அதன் நன்மை எமது மக்களுக்கு கிடைக்காதுபோகும்.

அத்துடன் உலக சந்தையில் மசகு எண்ணெய் குறைவடைந்துள்ளது. மசகு எண்ணெய் ஒரு பெரல் அமெரிக்க டொலர் 85 இல் இருந்து 68 டொலர்வரை குறைவடைந்திருக்கின்றது.

ஆனால் இதன் நன்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. எமது காலத்தில் விலை சூத்திரம் இருந்ததால் விலை கூடி, குறைந்தது.

ஆனால் இந்த அரசாங்கத்தின் விலை சூத்திரம், உலக சந்தையில் விலை அதிகரித்தால் எமது நாட்டிலும் விலை அதிகரிப்பதும் விலை குறைவடைந்தால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்காமல் இருப்பதுமாகும். அதேபோன்று காஸ் சிலிண்டர் வெடிப்பதிலும் சதித்திட்டம் இருக்கவேண்டும். 

ஏனெனில் ஆட்சியாளரின் புதல்வர் ஒருவரின் பெயரில் இந்தியாவில் இருந்து காஸ் சிலிண்டர் கொண்டுவர திட்டமிட்டு வருவதாக தெரியவருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right