(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத காலகட்டத்தில் கூட எதிர்கொள்ளாத நெருக்கடி நிலைமைகளை இன்று நாட்டு மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த அரசாங்கம் ஒவ்வொருவர் வீட்டிலும் எரிவாயு வெடிகுண்டை வைத்துள்ளது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29)  இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு ,வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நீதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாடு இன்று பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாத காலகட்டத்தில் கூட மக்கள் இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கவில்லை. 

பயங்கரவாத காலத்தில் பொது இடங்களில் குண்டு வெடிக்கும் அச்சுறுத்தல் இருந்தது, ஆனால் இன்று வீடுகளில் எப்போது எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர். அரசாங்கம் எரிவாயு வெடிகுண்டை சகல வீடுகளிலும் வைத்துள்ளது. 

சம்பளத்தையும், கொடுப்பனவுகளையும் தவிர ஏனைய சகலதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை நாட்டில் காணப்படுகின்றது. எனவே இந்த நிலைமைகளில் பாரதூரத்தை சாதாரணமாக கருதிவிட வேண்டாம்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலை குறைவு காணப்பட்ட நேரத்தில் அதில் அரசாங்கம் கொள்ளையடித்தது. 

எரிபொருள் மூலமாக கிடைத்த இலாபத்தை அரசாங்கம் என்ன செய்ததென்றே தெரியவில்லை. எரிபொருள் மூலமாக கிடைக்கும் இலாபத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்போம் என ஜனாதிபதி கூறினார், அதற்கான வர்த்தமானி விடுத்து இரண்டு மாதத்தில் வர்த்தமானி அறிவிப்பு நிராகரிக்கப்பட்டது.

எரிபொருள் நிதியத்தை உருவாக்கினர், அதற்கு என்னவானது என தெரியவில்லை,நாட்டில் பிரச்சினைகள் எழுந்த வேளையில் அரசாங்கம் நாடகமாட ஆரம்பித்தது. 

தமது இருப்பை தக்கவைக்க அரசாங்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாகவும், பஷில் ராஜபக்ஷ வருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றினர். மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி இன்று நாட்டையே நாசமாக்கிவைத்துள்ளனர். 

நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கு உடனடியாக தீர்வு காணுங்கள். நேற்று இரண்டு சிலிண்டர்கள் வெடித்துள்ளன. ஆகவே மக்களை பீதிக்குள் தள்ளாது உடனடியாக இதற்கு தீர்வொன்றை காணுங்கள் என்றார்.