(எம்.மனோசித்ரா)

ஒமிக்ரோன் வைரஸ் இலங்கையில் பரவியுள்ளதா என்பதை இனங்காண்பதற்காக நாடளாவிய ரீதியிலிருந்தும் மாதிரிகளைப் பெற்று வைரஸ் திரிபுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

ஒமிக்ரோன் வைரஸ் பல்வேறு மரபணு திரிபுக்களைக் கொண்டது என்பதால் டெல்டா உள்ளிட்ட ஏனைய பிறழ்வுகளை விட வேகமாக பரவக் கூடும் என்றும் ,  தடுப்பூசிகளுக்கும் ஈடுகொடுக்காததாகவும் காணப்படலாம் என்றும் ஆராச்சியாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். 

எவ்வாறிருப்பினும் டெல்டா உள்ளிட்ட பிறழ்வுகளினால் ஏற்படக் கூடிய மரணங்களை தடுப்பூசிகள் குறைத்துள்ளமையால் அவற்றைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும் என்றும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒமிக்ரோன் வைரஸ் தென் ஆபிரிக்காவிலேயே முதன் முதலில் இனங்காணப்பட்டது. கடந்த 24 ஆம் திகதி இந்த திரிபு இனங்காணப்பட்ட போதிலும், இது இனங்காணப்பட்ட மாதிரிகள் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். 

தென் ஆபிரிக்கா தடுப்பூசி வழங்கலில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அங்கு முழுசனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிறழ்வு பல்வேறு மரபணு திரிபுக்களைக் கொண்டது என்பதால் டெல்டா உள்ளிட்ட ஏனைய பிறழ்வுகளை விட வேகமாக பரவக் கூடும் என்று ஆராச்சியாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். அதே போன்று தான் தடுப்பூசிகளுக்கும் ஈடுகொடுக்க முடியாத வைரஸாக இது காணப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

இந்த அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டே உலக சுகாதார ஸ்தாபனம் இதனை 'வேரியன்ட் ஒஃப் கொன்சேர்ன்' என்று வகைப்படுத்தியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை இனங்காண்பதற்காக நாடளாவிய ரீதியிலிருந்தும் மாதிரிகளைப் பெற்று வைரஸ் திரிபுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம். 

சுகாதார தரப்பினர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் பொது மக்கள் முகக்கவசங்களை அணிதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கலாநிதி சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளதாவது,

பரவும் தன்மை:

டெல்டா உட்பட மற்ற திரிபுகளுடன் ஒப்பிடும்போது, ஒமிக்ரோன் அதிகமாக பரவக்கூடியதா அதாவது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிகவும் எளிதாகப் பரவக் கூடியதாக என்பது இன்னும் தெளிவாகத் உறுதிப்படுத்தப்படவில்லை.

நோயின் தீவிரம்:

டெல்டா உட்பட மற்ற வகைகளில் உள்ள நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் தொற்று மிகவும் கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

செயல்திறன்

இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட பிறழ்வுகளுடன் ஒப்பிடும் போது , ஒமிக்ரோன் வைரஸின் மூலம் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கலாம் என்று ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது முன்னர் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக மீண்டும் தொற்றுக்கு ஆளாகலாம்.

தடுப்பூசிகளின் செயல்திறன்:

தற்போது ஆதிக்கம் செலுத்தும் டெல்டா வைரஸ் உட்பட வைரஸ் தொற்றினால் ஏற்படக் கூடிய உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கு தடுப்பூசிகள் முக்கியமானவை. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக செயல்படுகின்றன. இவை தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கான பரிந்துரைகள்

நபர்களுக்கிடையில் மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீற்றல் இடைவெளியைப் பேணுதல், நன்கு பொருந்தக்கூடிய முகமூடியை அணிதல்,  காற்றோட்டத்தை மேம்படுத்த ஜன்னல்களைத் திறந்து வைத்தல், நெரிசலான இடங்களைத் தவிர்த்தல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளல் என்பன வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.