(நா.தனுஜா)

நாம் தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டைக் கையளித்தபோது வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 720 கோடி டொலர்களாகக் காணப்பட்டது.

இருப்பினும் தற்போது அதன் பெறுமதி வெறுமனே 120 கோடி டொலர்களாகும். பொதுவாக குறைந்தபட்சம் மூன்று மாதகாலத்திற்கு அவசியமான வெளிநாட்டுக்கையிருப்பு பேணப்படவேண்டும்.

ஆனால் தற்போது காணப்படும் இருப்பு மாதமொன்றின் இறக்குமதிகளுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதற்குக்கூடப் போதுமானதல்ல. 

வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன் ஓய்வூதிய குறைப்பை அரசாங்கம்  நீக்கிக்கொள்ளவேண்டும் - எரான் விக்ரமரத்ன வலியுறுத்தல் | Virakesari.lk

அதன் விளைவாக எரிபொருளை இறக்குமதி செய்யமுடியாமல் போவதுடன் மாத்திரமன்றி, வெகுவிரைவில் மின்துண்டிப்பு ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, மியன்மார் உள்ளிட்ட சுமார் 80 நாடுகள் சர்வதேசத்தின் அழுத்தத்தின்பேரில் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அவசர நிதியுதவியைப் பெற்றுக்கொண்டிருப்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா?, அந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றதா?, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிபலிப்பு என்ன? என்று ஒருவருடத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தேன். ஆனால் இந்தக் கேள்விகளுக்குத் தற்போதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

நாட்டிலுள்ள வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். ஏனெனில் நாம் தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டைக் கையளித்தபோது வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி சுமார் 720 கோடி டொலர்களாகக் காணப்பட்டது.

இருப்பினும் புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் மாதாந்தம் வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி படிப்படியாகக் குறைவடைந்துவந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளின்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாடுகளுக்கு வழங்கப்படுகின்ற அவசர நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவில்லை.

அதற்கான காரணம் என்ன? ஏனெனில் இவ்வாறான நிதியுதவியை வழங்குவதற்கு முன்னதாகக் குறித்த நாட்டின் நிதிநிலைவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். அந்த மதிப்பீட்டின் பிரகாரம், வழங்கப்படுகின்ற நிதியைத் திருப்பிச்செலுத்துவதற்கான இயலுமை குறித்த நாட்டிற்கு இல்லை என்பது கண்டறியப்படின் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்கப்படமாட்டாது.

எனவே ஆசியப்பிராந்தியத்தின் பல்வேறு நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் இந்நிதியுதவியைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், இலங்கை அதற்கான தகுதியை இழந்திருப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற வேளையில், அரசாங்கம் இதனுடன் தொடர்புடைய தரவுகளை மறைப்பதற்கான காரணம் என்ன? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி தற்போது நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 120 கோடி டொலர்களாகும்.

ஆனால் மாதமொன்றில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குச் செலுத்தவேண்டிய கொடுப்பனவின் பெறுமதி அதனைவிடவும் உயர்வாகும். இது மிகவும் பாரதூரமானதொரு நிலையாகும்.

ஏனெனில் பொதுவாக குறைந்தபட்சம் மூன்று மாதகாலத்திற்கு அவசியமான வெளிநாட்டுக்கையிருப்பைப் பேணுவது அவசியமாகும்.

எனவே தற்போது வெளிநாட்டுக்கையிருப்பு உரிய மட்டத்தில் பேணப்படாததன் காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்யமுடியாமல்போவதுடன் அதன்விளைவாக மின்சாரத்தைத் துண்டிக்கவேண்டிய நிலையேற்படும். எதிர்காலத்தில் இந்த நிலையேற்படுமானால், அரசாங்கம் அதுபற்றிய தெளிவூட்டல்களை முன்கூட்டியே வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.