(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையின் கடன் கொள்கையில் 1956ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையில் அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட கடன் 14.5 வீதமாகும்.

ஆனால் 2005 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 77.4 வீத கடன்களை பெற்றுக்கொண்டார்.

இதுவே நாடு கடன் நெருக்கடிக்குள் மூழ்க பிரதான காரணமாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 

Articles Tagged Under: பாட்டலி சம்பிக்க ரணவக்க | Virakesari.lk

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தேசத்துரோக செயற்பாடு அல்ல, அல்லது சர்வதேசதிற்கு அடிபணியும் செயற்பாடும் அல்ல. மஹிந்த ராஜபக்ஷவும் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு ,வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நீதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி பிரச்சினை படிப்படியாக தற்போது வலுசக்தி நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இது முழுமையான பொருளாதார நெருக்கடியாக அடுத்த சில மாதங்களில் மாற்றம் பெரும்.

அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசை, இப்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள், மற்றும் வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி நிலைமையினால் அடுத்து வரும் காலத்தில் எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் ஏற்படப்போகும் பாரிய சிக்கல் நிலைமைகள் என்பன கண்முன்னே தெரிகின்றது. 

எரிவாயு அனர்த்தம் குறித்து அமைச்சர் லசந்த அழகியவன்ன கணக்கெடுப்பு ஒன்றினை முன்வைத்தார், 82 வாரங்களில் 293 வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.

ஒரு மாதத்திற்கு 2.5 வீத சேதாரம் என்ற அடிப்பையாகும். அப்படியென்றால் நவம்பர் மாதத்தில் எத்தனை அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன? இது அசாதாரணமான நிலைமை இல்லையா? இதற்கு காரணாம் என்ன? இவற்றை தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஆண்டு இறுதிக்குள் 2900 மில்லியன் டொலர்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்காக 7 பில்லியன் டொலர்கள் மொத்தமாக செலுத்த வேண்டியுள்ள நிலையிலும் இப்போது எம்மிடம் கையிருப்பில் 1.5 பில்லியன் டொலர்களே உள்ளன.

இவ்வாறான நிலையில் தான் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட சகலதையும் இறக்குமதி செய்யாது தடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு கொவிட் நிலைமைகளை முன்னிறுத்தக்கூடாது. அதனை தாண்டி அரசாங்கம் விட்ட பல தவறுகள் உள்ளன, அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தேசத்துரோக செயற்பாடு அல்ல, அல்லது சர்வதேசதிற்கு அடிபணியும் செயற்பாடு அல்ல.

மஹிந்த ராஜபக் ஷவும் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றார். ஆகவே இதனை கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் ஜப்பானிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தியது பாரிய நட்டத்தை ஏற்படுத்தியது.

பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தி தமக்கு தேவையான நிறுவனங்களுக்கு கொடுத்தமை நாட்டை வெகுவாக பாதித்துள்ளது.

இதற்கு மத்தியில் கையாண்ட தவறான விவசாய கொள்கை மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சகல செயற்பாடுகளுமே சர்வதேச தரப்படுத்தல்களில் எம்மை பிந்தள்ளவும், கடன் நெருக்கடிகள் ஏற்படவும் பிரதான காரணமாகும்.

இலங்கையின் கடன் கொள்கையில் 1956ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட கடன் 14.5 வீதமாகும்.

ஆனால் 2005 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 77.4 வீத கடன்களை பெற்றுக்கொண்டார்.

இதுவே நாடு கடன் நெருக்கடிக்குள் மூழ்க பிரதான காரணமாகும். பெற்றுக்கொண்ட கடன்களை முறையாக பயன்படுத்தவில்லை, அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படாதமையே இந்த நெருக்கடிக்கு காரணமாகும். இதனை சமாளிக்க இப்போது வளங்களை விற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மின் வெட்டு குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது, இப்போது மழைக்காலநிலை என்பதால் மின் தட்டுப்பாடு ஏற்படாது, ஆனால் காலநிலை மாறும் நேரத்தில் கண்டிப்பாக மின் தட்டுப்பாடு ஏற்படும்.

எனவே இப்போதே தீர்வுகளை சிந்திக்க வேண்டும். நிலக்கரி இறக்குமதி தடைப்பட்டால் நிலைமை மோசமடையும். லெபனான் நாட்டின் நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் என்றார்.