(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பெறுபேற்றை சுதந்திர கட்சி மீட்டிப்பார்க்க வேண்டும்.

சுதந்திர கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்ததன் காரணமாகவே பாராளுமன்றிற்கு தெரிவானார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளை உடைய அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது  கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானது. முரண்பாடுகளுக்கான தீர்வு உள்ளக பேச்சு வார்த்தையின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி பங்காளி கட்சியாக உள்ளதே தவிர பிரதான கட்சியாக இருக்கவில்லை.

சுதந்திர கட்சியின் ஆதரவுடன் தான் அரசாங்கம் செயற்படுகிறது. சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் ஆட்சிமாற்றம் ஏற்படும் என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டையும், அக்கட்சியின் உறுப்பினர்களது செயற்பாட்டையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

2015ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்பாராத தீர்மானங்கள் பல விடயங்களை உணர்த்தியுள்ளது. அதனை இன்றும் மறக்க முடியாது. அதன் காரணமாகவே சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்படுகிறோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களின் வசம் தான் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதற்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக குறிப்பிடப்படுகிறது. தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தேர்தலின் தனித்து போட்டியிடுவதற்கு முன்னர் சுதந்திர கட்சி 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பெற்றுக்  கொண்ட வாக்குகளை முதலில் மீட்டிப்பார்க்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது.ஆட்சியில் இருந்தும் மக்களாணையை அவர்களால் பெற முடியவில்லை.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுதந்திர கட்சி 9 ஆசனங்களையே கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டு பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்ததன் காரணமாகவே சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றிற்கு தெரிவானார்கள்.

கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும். அனைத்து பங்காளி கட்சியினருடன் ஒன்றிணைந்து செயற்பட முயற்சிக்கிறோம். சுதந்திர கட்சி தனித்து செல்வதாயின் அதனை எம்மால் தடுக்க முடியாது என்றார்.