(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

'ஒமிக்ரோன்' கொவிட் -19 வைரஸ் பிறழ்வு குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கைக்குள் உள்நுழையும் சகல பயணிகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும், சுகாதார வழிமுறைகளை உடனடியாக கடுமையாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29 ), நாட்டின் அவசரகால நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் முன்வைத்த விசேட கூற்றின் போதே இதனை சுட்டிக்காட்டினார். 

அவர் இது குறித்து கூறுகையில்,

இம்மாதம் 26 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனம் அவசர கூட்டமொன்றை கூட்டி 'ஒமிக்ரோன்' கொரோனா வைரஸ் குறித்து அவதானம் செலுத்தியுள்ளனர். இந்த வைரஸ் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதற்கு முன்னர் 'லம்டா' 'எப்சிலோன்' மற்றும் 'மூ' ஆகிய பிறழ்வுகள் குறித்தும் அவர்கள் இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்காத போதிலும் அல்பா, பீட்டா, கெமா மற்றும் டெல்டா வைரஸ்களுக்கு விசேட அடையாளங்கள் இருப்பதால் அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். 

இப்போது 'ஒமிக்ரோன்' வைரஸும் இதே அச்சுறுத்தல் நிலையில் உள்ள காரணத்தினால் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தொற்றாளர்கள் மத்தியில் 99.5 வீதமான தாக்கம் டெல்டா வைரஸ் பரவளினால் ஏற்பட்டது. இந்த நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் மூன்று சவால்களை நிபுணர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். 

வேகமாக தொற்றக்கூடிய இவ்வாறான பிறழ்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும், எமது நாட்டிலும் இந்த தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். 

மேலும், ஏற்கனவே வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கூட மீண்டும் இந்த தாக்கங்களுக்கு உள்ளாகலாம் எனவும், தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நபர்களிடத்திலும் இந்த வைரஸ் பரவக்கூடிய தன்மைகள் இருப்பதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வயதானவர்களையும் தொற்றக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், நாட்டுக்குள் உள்நுழையும் வேளையில் தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும், சகல பயணிகளையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்த வேண்டும் என்பதும், எத்தனை தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டாலும் அவர்கள் கண்டிப்பாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்த வேண்டும். 

அவ்வாறு வைரஸ் தொற்றாளர் உறுதிப்படுத்தப்பட்டால் உடனடி சிகிச்சைக்கு அனுப்பும் வேலைத்திட்டம் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவது, உடல் உபாதைகளுக்கு உற்பட்டவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு முறையான ஆலோசனையில் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க வேண்டும். 

அதேபோல் வெறுமனே அடிப்படை சுகாதார வழிமுறைகளை மாத்திரம் பின்பற்றாது முழுமையான சுகாதார விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் குறித்து நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.