கவலையை பகிர்ந்து கொள்ள எவருமில்லை ! தங்களைத் தாங்களே ஆற்றுப்படுத்திய கிண்ணியா மக்கள்

Published By: Gayathri

29 Nov, 2021 | 03:08 PM
image

ஹஸ்பர் ஏ ஹலீம்

திடீர் சோகத்தில் ஆழ்த்திய படகு பாதை விபத்து நாளான 23.11.2021 ஆம் திகதியை மறக்க முடியாது.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள கிண்ணியா நகர சபையையும் கிண்ணியா பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலம்.

இதில் படகு பாதை உடைந்து கவிழ்ந்ததில் ஐந்து  மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தார்கள். 27 நபர்கள் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.  

புனரமைப்புக்காக மூடப்பட்ட இந்த பாலம் இயந்திர படகு பாதை மூலமான போக்குவரத்து இடம் பெற்ற நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவ நாளன்று காலை வேலையில் பிரதேச சபை பகுதியில் இருந்து நகர சபை பகுதியை நோக்கி பயணித்த வேலையில் கரையை அடைய சுமார் 50 மீற்றர் தூரத்தில் இப் பகுதி கவிழ்ந்ததில் இளம் பிஞ்சுகளின் உயிரையும் குடி கொண்டது.

இதனால் கிண்ணியா சமூகம் மட்டுமல்ல. முழு நாடுமே சோகத்தில் அன்றைய தினம் மூழ்கியது. இதனால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் வீதியில் தடைகளை ஏற்படுத்தியும் டயர்களை எறித்தும் தங்களை தாங்களே ஆற்றுப்படுத்திக் கொண்டனர்.  

"இந்த படகுப் பாதை விபத்திற்கு வேகமான ஓட்டமே காரணமென தெரிவிக்கப்படுகின்றது. திரும்பும் போது  வேகமாக திருப்பியதனால் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நான் சுழியோடியே வெளியே வந்தேன். அத்துடன் ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்றியுள்ளேன்" என படகு பயணத்தில் உயிர் தப்பி கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பும்போது ஆசிரியரான எம்.சாமித் தனது கருத்தை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்தார்.

இந்த இயந்திர படகானது சுமார் மூன்று பிளாஸ்டிக் வல்லங்களை கொண்டு பலகையுடன் இணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டாலும்கூட இவ்வாறான கோர சம்பவத்துக்கு அது வித்திட்டது.

கிண்ணியா பெறியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு இப் படகு செலுத்துவதற்கான அனுமதிக் கடிதம் கிண்ணியா நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் அவர்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதம் மூலமாக 2021.10.28 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தில் குறிப்பிட்டதாவது,

"குறிஞ்சாக்கேணி இறங்கு துறை பகுதியில் பால நிர்மாண காலப் பகுதியில் பொது மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் மோட்டார் படகு சேவையை நடத்துவதற்கு தாங்களுக்கு பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது. 

குறித்த சேவையின்போது பாதுகாப்பு நியமங்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். குழந்தைகள் மற்றும் பாடசாலை சிறார்களுக்கு மேற்படி சேவையானது இலவசமாக வழங்கப்பட வேண்டும். படகினது உறுதிப்பாடு குறித்து அவ்வப்போது சோதிப்பது அவசியமானது. மேற்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தங்களுக்கு வழங்கப்படும் அனுமதி இரத்துச்செய்யப்படும்"  

இது தொடர்பில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தியிடம் வினவியபோது  தவிசாளரால் வழங்கப்பட்ட இந்த அனுமதி கடிதம் சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாமல்  வழங்கப்பட்டுள்ளது. இது பல வாதப் பிரதிவாதங்களை உண்டாக்கியிருக்கிறது.

நகரசபைக்கு முறையாக அனுமதி வழங்கப்பட முடியுமாயிருந்தால், அதன் தரம் உறுதிச்சான்று, தொழில்நுட்பம் சம்பந்தமான சான்றிதழ், Marine, Nara சான்றிதழ், பயணிகளின் உச்ச எண்ணிக்கை, ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், பாதுகாப்பு அங்கிகள் ஏற்பாடு, உதவி ஆட்கள் நியமனம், பயணிகள் காப்புறுதி ஏற்பாடு என பல்வேறு விடயங்கள் பரீட்சிக்கப்பட்டு இருக்கும்.  

முறைகேடாக தவிசாளரால் வழங்கப்பட்ட சான்றிதழுக்கு தவிசாளரே வகைகூற வேண்டும். விசாரணை ஆரம்பிக்கும்போது தாமாக தகவல்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

இதற்கு முன்னரும் இவ்வாறு பல முறைகேடுகள் நடந்து அதற்கு நான் சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன் என்றார்.  

இந்த பாலம் சுமார் 100 மீற்றர் தூரம் கொண்டது. 1977 களில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பில் பல வாக்குறுதிகள் அரசியல்வாதிகளால் கொடுக்கப்பட்டது. ஆனாலும் வெறும் பேச்சுடன் முடிவடைந்தது.

2015 இல் வெள்ள அனர்த்தம் காரணமாக பகுதி பகுதியாக இரண்டாக பிளந்து  உடைந்து சேதமாகியது இந்த பாலம்.

இதனால் பயணிக்க முடியாதிருந்த நிலையில் தற்காலிக இரும்பு பாலமொன்று  உடைந்த  பகுதிக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக போடப்பட்டது.  

இதன் ஊடாக பால புனரமைப்புக்கு முன்னர் நாளாந்தம் 8,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணித்து வந்தார்கள்.  

கடந்த  ஜனாதிபதி தேர்தலின்போது முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா நகர சபை மைதானத்தில் 2014 டிசம்பர் மாதமளவில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தின் போது இப் பாலத்தை முழுமையாக புனரமைப்பு செய்து தருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.  

இருந்தபோதிலும் பல போராட்டங்களை மக்கள் பால புனரமைப்புக்காக வேண்டி நடத்தினர். கிண்ணியா சமூகம் ஏமாற்றப்பட்ட நிலையில் 2019 இல் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் அடிக்கல் நடப்பட்டது. அதுவும் தோல்வி கண்டது.

சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலம் தற்போதைய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சா  அவர்களினால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க 2021.04.10 ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடை நடுவில் கைவிடப்பட்டு மீண்டும் ஆரம்பமானது .

புனர்நிர்மாணம் காரணமாக இழுவை படகு சில மாத காலங்கள்  இயங்கின. அதன்பின் விபத்துக்குள்ளான இயந்திர படகு ஆரம்பித்து சுமார் மூன்று வாரங்கள் கடந்த நிலையில் இக்கோர சம்பவம் நிகழ்ந்து உயிர்களை காவு கொண்டது. இந்த படகு  விபத்து  தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் படகு உரிமையாளர், படகு ஓட்டுனர் உட்பட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கிண்ணியா தளவைத்தியசாலையில் இவ் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பியவர்கள் சிலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

 "நீரில் மூழ்கும்போது பிள்ளைகளை கூட கையால் பிடிக்க முடியவில்லை. ஏதோ உயிர் தப்பி பிள்ளையுடன் கரை சேர்ந்தேன்" என ஒரு தாய் கண்ணீர் வடித்தார்.

மற்றுமொரு தாய் தனது பிள்ளையுடன் உயிர் தப்பியதை விவரித்தபோது,

"காலை 7.10 மணியளவில் படகில் ஏறி நடுவுக்கு வந்தோம் நிறைய பயணிகளை ஏற்றியிருந்தனர். இதன்போது ஒரு பகுதி குடை சாய்ந்து நீரில் மூழ்கடிக்கப்பட்டது. எனக்கு நீந்த தெரிந்ததால் ஒரு கையால் பிள்ளையை இருகப் பிடித்து காலால் நீந்தி கரை சேர்ந்தேன். ஆழமான பகுதியில் இருந்தே நீந்தி வந்தேன் அதன் பின் ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன்" என தனது உயிர் தப்பிய வார்த்தைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.

குறித்த பாலம் ஊடாக பயணிப்பது சிறிய தூரம் என நினைத்த போக்குவரத்தாளர்கள் வீதி ஊடான நகர, பிரதேச சபை தூரமாக சுமார் 3 கிலோமீற்றர் தரை வழி போக்குவரத்தைக் கொண்டது.

பல கனவுகளுடன் பயணித்த சிறார்கள் கல்விக்காய் காத்திருந்து எதிர்காலத்தை நினைத்து பார்க்கையில், மனம் கனக்கிறது. ஆறாத் துயரால் பெற்றார்கள் ஆழ்ந்த மனவேதனையுடன் இருக்கிறார்கள். இந்த பாலம் இருந்திருந்தால் இவ்வாறான படகு விபத்து இடம் பெற்றிருக்காது. 

ஆனால் இலங்கை கடற்படை மூலமாக சுமார் 25 நபர்கள் பாதுகாப்பு அங்கியுடன் பயணிக்கக் கூடிய இயந்திர படகு சேவை தற்போது (26.11.2021) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான இயந்திரம் மூலமான படகில் பாதுகாப்பு அங்கிகள் இல்லாத நிலையில் பல குறைபாடுகள் கவனிப்பாரற்ற நிலையில் இது இடம் பெற்றுள்ளது. இதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படாத நிலை இங்கு பெரும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது.

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிகார் இது தொடர்பில் உள்ளூர் ஊடகமொன்றுக்கு (24) கருத்து தெரிவிக்கையில்,

“நகர சபை அனுமதி கொடுத்தது தெரியாது. ஆனால் நான் முன்னர் இழுவை படகுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கினேனோ தவிர அதற்கான எழுத்து மூலமான ஆவணங்கள் கொடுக்கப்படவில்லை. சுமார் 75 மீற்றர் தூரமான ஆழம் குறைந்த சேவையை நடத்த  தனியாருக்காக ஒத்துழைத்தேன்” என்றார்.  

ஒட்டு மொத்தமாக இந்த விபத்தின் பிரகாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் சிறுவர்களான இரு சகோதரர்கள் மற்றும் மற்றுமொரு குடும்பத்தில் இருந்து தாயும் மகளும் என நான்கு இளம் பிஞ்சுகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களுக்காகவும் உயிர்தப்பிய உறவுகளுக்காகவும் ஆழ்ந்த அனுதாபங்களை கிண்ணியாவில் துக்கதினமாக 25.11.2021 அன்று அனுஷ்டிக்கப்பட்டது. ஆனாலும் எம்மவர்களின் உள்ளங்களில் அந்த நாட்களை ஒருபோதும் மறக்க முடியாது.

இந்த விடயம் தொடர்பில் பால அபிவிருத்தி தொடர்பில் ஆரம்பத்தில் கரிசனை காட்டாமை, மக்களின் கருத்துக்களை செவிசாய்க்காமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் இனியும் நடக்ககக்கூடாது. இவ்வாறான சம்பவங்களில் விபத்து இடம்பெற்ற நாளன்று கிண்ணியாவே சோகத்தில் மூழ்கியது.

 

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வீட்டினை சேதப்படுத்தினார்கள். நீதி கேட்டு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டார்கள். 

இன்னும் ஆறாத வடுக்களாக தங்களுக்கான நியாயமாக விரைவாக பால அபிவிருத்தியை உரிய காலத்தில் செய்திருந்தால் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது என்பது அனைவருக்கும் வெளிச்சம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22