(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.

எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து சுதந்திர கட்சி அதிகம் கவனம் செலுத்தியுள்ளமை அவதானிக்க முடிகிறது.

வெற்றிடமாகவுள்ள தொகுதி அமைப்பாளர் பதவி நியமனத்திற்கான நேர்முக பரீட்சை சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது சிறந்த அரசியல் தீர்மானமாக அமையும் என சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கும்,பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து வேறுப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளது.

அரசாங்கத்தின் மூன்றின் இரண்டு பெரும்பான்மை பலம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்கள் வசம் உள்ளது என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் பாராளுமன்றில் ஆற்றிய உரையினை தொடர்ந்து கூட்டணியின் முரண்பாடு பகிரங்கப்படுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் இருப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை சுதந்திர கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அரசாங்கத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லலாம்.

சுதந்திர கட்சியை இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளதன் ஊடாக சுதந்திர கட்சியின் ஆதரவு அரசாங்கத்திற்கு அத்தியாவசியமற்றது என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ள அரச தலைவர்கள் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சேறு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

அரச தலைவர்களின் ஆதரவுடன் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது என சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டார்.