(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில்  மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது எங்களுக்கு சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று  இடம்பெற்றது. இதன்போது  அங்கு அமர்ந்திருந்த இணைத் தலைவர்களை நோக்கி கோரிக்கை விடுக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் உள்ளுர் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

யாழ்ப்பாணத்திலிருந்தும் மன்னாரிலிருந்தும் பூநகரியில் நாம் தொழில் செய்யும் கடற்கரைக்கு வரும் இழுவைப் படகுகளால் எங்களது பெறுமதிவாய்ந்த கடற்றொழில் உபகரணங்கள்  அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் வருகிறது. 

இது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் பலருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனத்தெரிவித்த ஜோசப் பிரான்சிஸிடம், ஐயா சில காலங்கள் பொறுத்திருங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இது தொடர்பில் சட்டவரைபு ஒன்றை கொண்டுவந்திருக்கின்றார். அதற்கு இழுவைப் படகு தொழில் மேற்கொள்கின்றவர்களிடம் இருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே சில தாமதங்கள் ஏற்படும் அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.

இதற்கு மறுப்புத்  தெரிவித்த சமாசத் தலைவர் சுமார்  ஆயிரத்து ஆறுநூறு பேர்  தொழில் செய்கின்ற இழுவை படகுகளை  பற்றி  கவனத்தில் எடுக்கின்ற நீங்கள், அறுபதாயிரம் சாதாரண கடற்றொழிலாளர்களை  பற்றி அக்கறை எடுக்கவில்லை.  நாங்கள் எழை கடற்றொழிலாளர்கள்  இழுவைப் படகு தொழிலாளர்கள் போன்று கொழும்பு வரை சென்று எதிர்ப்புத் தெரிவிக்க இயலாது. உயர்ந்தபட்சம் இவ்வாறான கூட்டங்களில் மாத்திரமே எங்களது  உணர்வை வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அவர், இந்திய இழுவைப் படகுகளாலும் நாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றோம், ஆனாலும் இந்திய இழுவைப் படகு கடற்றொழிலாளார்கள் கைது செய்யப்படுகின்றார். ஆனால் எமது உள்ளுர் இழுவைப் படகுகளை  உரிய தரப்புக்கள் எவரும் கட்டுப்படுத்துகின்றார்கள் இல்லை.

எனவே இனியும் எங்களால் பொறுத்திருக்க முடியாது. உங்களால் உள்ளுர்  இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த முடியாது என்றால் எங்களுக்கும் இழவைப் படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது எங்கள் கடற்றொழிலாளர்களுக்கு சவப்பெட்டிகளை தாருங்கள் என விசனத்துடன்  தெரிவித்தார்.

இதன் போது இணைத் தலைவா்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் மற்றும் மாவை சேனாதிராஜா, வட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், ஐங்கரநேசன்,சத்தியலிங்கம், குருகுலராஜா மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரட்ணம் மற்றும் திணைக்களங்களின் தமைலவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.