தமிழ்த்திரை உலகின் மூத்த நடன இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான சிவசங்கர் இன்று மாரடைப்பால் காலமானார். 

சில தினங்களுக்கு  முன் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 

இதற்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய சிகிச்சைக்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான தனுஷ், சோனு சூட் உள்ளிட்ட பலர் உதவி செய்தனர். 

இந்நிலையில் இன்று இரவு அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழி திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் சிவசங்கர். தனுஷ் நடிப்பில் வெளியாகி அவரை வெற்றி பெற வைத்த 'திருடா திருடி' என்ற படத்தில் இடம்பெற்ற 'மன்மதராசா..' என்ற பாடலுக்கு நடனம் அமைத்தவர் இவர் தான். 

ஏராளமான திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய இவர் நடிகராகவும் நடித்திருக்கிறார். சூர்யா நடிப்பில் வெளியான 'தானாசேர்ந்தகூட்டம்', விஜய் நடிப்பில் வெளியான 'சர்க்கார்' சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

72 வயதாகும் இவர், 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி, சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். இவரது உயிரிழப்பு தமிழ் திரையுலகில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான திரையுலகினர் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.