முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர்  ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் மிலேட்சத்தனமாக தாக்கப்பட்ட சம்பவத்தினை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக  கண்டிக்கிறதென அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

Articles Tagged Under: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை | Virakesari.lk

இது தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதானது,

தமிழர் தாயகப் பகுதிகளில்  கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் நீண்ட காலமாகவே  ஸ்ரீலங்கா அரச படைகளாலும், புலனாய்வாளர்களாலும் தொடர்ந்தும் பல அச்சுறுத்தல்களையும், விசாரணைகளையும்  எதிர்கொண்டு வருகின்றார்கள்.

ஜனநாயக நாடு என்று கூறப்படுகின்ற இதே நாட்டிலேயே ஒரு  ஊடகத்துறையினர்  மீது கட்டவிழ்த்து விடப்பட்ட விதமாக  மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான மிலேட்சத்தனமான  சம்பவங்கள் இன்னும் நாட்டை மிக மோசமான பாதைக்கே இட்டுச்செல்லும்.

இந்த நாட்டில் தமிழர்களாகிய நாம் எமது தாயகப் பகுதியில்  நிம்மதியாக வாழ்வதற்கு நாம் விரும்பும் ஒரு   நிரந்தரமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றோம். ஆனால் இவ்வாறான மோசமான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் எமக்கான தீர்வு என்பது சாத்தியமற்றது என்பதை அனைத்து அரசியல் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களது கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்தை ஆயுதம் கொண்டு அடக்க  நினைப்பது என்பது இந்த அரசின் மடமைத்தனம்.  முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது தமிழர்களுடைய ஊடக சுதந்திரத்தின் மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதமுடியும்.

மேலும் இச் சம்பவத்திற்கான நீதியான விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு  குறித்த  ஊடகவியலாளரின்  பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இராணுவத்தினரை  கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்த அரசை தமிழ் தேசிய  பண்பாட்டுப் பேரவை வலியுறுத்துகின்றது.