இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் கரிசனை

By T Yuwaraj

28 Nov, 2021 | 09:41 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அரபு இராச்சியம் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதரகப் பொறுப்பாளர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா ஹூன் சயீத் அல் நாதனின் வதழ்த்துக்களை தெரிவித்த தூதரக பொறுப்பாளர் , இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் விருப்பத்தினையும் வெளிப்படுத்தினார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுசபை 76 ஆவது கூட்டத்தொடரில் கைத்தொழில் மற்றும் மேம்பட்ட தொழிநுட்ப அமைச்சர் கலாநிதி சுல்தான் அல் ஜாபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் , இலங்கை அரசாங்கமும் ஐக்கிய அரபு இராச்சியமும் நல்லுறவுகளைக் கொண்டுள்ளதாகவும் , தனது பதவிக்காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான இலங்கையின் உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் பல்தரப்பு மன்றங்களில் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு நல்கிய ஆதரவையும் அமைச்சர் இதன் போது பாராட்டினார்.

பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 21 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தின் போது இலங்கை துணை தலைவராகப் பொறுப்பேற்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் , சங்கத்தின் முன்னேற்றத்திற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னாள் துணை தலைவராக ஆற்றிய பங்கை பாராட்டினார்.

2021 டிசம்பரில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் 'சூழலியல் , பொருளாதாரம் மற்றும் தொற்று' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் போது, இந்த விடயங்கள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right