கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும் - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

By Digital Desk 2

28 Nov, 2021 | 04:40 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

ஆசிரிய துறைக்கு ஏதுவான கெளரவமான சம்பளத்தையும் அவர்களுக்கான கெளரத்தையும் நாட்டின் சகல ஆசிரியர்களுக்கும் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும்.

நாட்டின் சிறந்த பிரஜையை உருவாக்குவது அவர்களது கைகளிலேயே தங்கியுள்ளது.  அவர்களே அதன் பங்குதாரர்கள் . அரசாங்கம் அல்ல என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பிள்ளைகளை நாம் சரியாக வளர்த்தெடுக்காவிட்டால், நாட்டின் எதிர்காலம் இருண்டதாக அமையும். ஆகவே, கல்வித்துறை தொடர்பில் நாம்  அவதானம் செலுத்த வேண்டும்.

இதனால் போட்டித்தன்மைமிக்க கல்விச் சூழலில் குறைந்த திறனுடைய பிள்ளைகள்  ஓரங்கட்டப்படக்கூடிய நிலை ஏற்படும். ஆகவே, அப்பிள்ளைகளின் வாழ்க்கை இருண்டதாக அமையக் கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இயேசுவினதும் மரியாளினதும் அன்பின் சகோதரிகள் கன்னியர் இல்லத்தின் 125 ஆவது ஆண்டு விழா மற்றும் கேகாலை புனித சூசையப்பர் மகளிர் வித்தியாலயத்தின் 111 ஆவது ஆண்டு விழா  கேகாலை புனித  சூசையப்பர் கன்னியர் மடத்தில் விசேட நன்றித் திருப்பலியொன்று மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"கொவிட் - 19  அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைக் கல்வி கட்டமைப்பு மூடப்படுவதற்கு நேர்ந்திருந்தது. ஒன்லைன்  மூலமான கல்வி கற்கும் பிள்ளைகளை பெற்றோர் முறையாக வழிநடத்தாவிட்டால், பல்வேறு விதமான முறைக்கேடுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

கல்வி அமைச்சிடமும், அதற்கு பொறுப்பானவர்களிடமும் பாடசாலைகளை மூடாது கற்றல் நடவடிக்கைகளை தொடரும்படி வேண்டிக் கொள்கிறேன். இனிமேலும், பாடசாலைகளை மூடாது கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியுமானால் அது சிறந்த விடயமாக அமையும். பாடசாலைக்குள்ளேயே மாணவர்களுக்கான பாதுகாப்பை வழங்கி, பாடசாலைக்குள்ளேயே மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவது சிறந்தாகும்.

 

பிள்ளைகளை நாம் சரியாக வளர்த்தெடுக்காவிட்டால், நாட்டின் எதிர்காலம் இருண்டதாக அமையும். ஆகவே, கல்வித்துறை தொடர்பில் நாம்  அவதானம் செலுத்த வேண்டும். இதனால் போட்டித்தன்மைமிக்க கல்விச் சூழலில் குறைந்த திறனுடைய பிள்ளைகள்  ஓரங்கட்டப்படக்கூடிய நிலை ஏற்படும். ஆகவே, அப்பிள்ளைகளின் வாழ்க்கை இருண்டதாக அமையக் கூடும்.

 

பெற்றோர், பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புகளுக்கும் அனுப்பி படி,படி என பலவந்தப்படுத்துகின்றனர். அவர்கள் பரீட்சையில் சித்தியடைக்கூடும். ஆனாலும்,  அவர்களது ஆளுமையை அதிகரிக்கச் செய்யாமல் கல்வியை மாத்திரம் அதிகரிக்கச் செய்வதில் பலனில்லை. ஏனெனில், அவர்கள் சமூகத்தில் முகங்கொடுக்கவுள்ள எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு சக்திமிக்கவர்களாக இருக்க வேண்டும்.

நீதியான , சாதாரண பிரஜையொன்றை உருவாக்கிக்கொள்ளக்கூடிய கல்வி அவசியமாகும். ஆசிரியர்கள் அதன் பங்குதாரர்களாவர். அரசாங்கம் அல்ல. ஆசிரிய துறையின் கெளரவத்தை பாதுகாத்துக்கொள்ள ஆசிரியர்கள் தெரிந்திருக்க வேண்டும். இதனை தொழிற் சங்கத்தைக் கொண்டு செயற்படுத்த முடியாது. ஆசிரிய துறைக்கு ஏதுவான கெளரவமான சம்பளம், கெளரவமாக நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் சகல ஆசிரியர்களுக்கும் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும்.

அதைப்போலவே, ஆசிரியர்களும் தமது தொழிலில் கிடைக்கக்கூடிய வருமானத்தை விடவும் மாணவர்களை மனதில் நினைத்து செயற்பட பழக்கப்படுத்திக்கொண்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right