இராஜதுரை ஹஷான்

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை பதினாறாயிரத்தால்  அதிகரிக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது. 

முன்வைக்கப்பட்டுள்ள நான்கு பிரதான கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு கிடைக்காவிடின் 32 அரச சேவை தொழிற்சங்கத்தினரை ஒன்றிணைத்து நாளை திங்கட்கிழமை முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம் என இலங்கை அரசாங்க உத்தியோகப்பூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.எ.பி. பஸ்நாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தவறான செயற்பாடாகும். அரச சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் இம்முறை வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.

வாழ்க்கை செலவுகளுக்கு அமைய அரச ஊழியர்களுக்கு  சம்பளத்தை அதிகரித்தல்,அரச ஊழியர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை 10 வருடத்தினால் அதிகரித்துள்ளதை மீள் பரிசீலனை செய்தல், மற்றும் அரச ஊழியர்களை அவமதித்தல்,அரச சேவையாளர்களின் பேச்சு சுதந்திரத்தை முடக்கும் வகையிலான சுற்றறிக்கைளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த 12ஆம் திகதி முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம்.

அரச சேவையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்க தரப்பினர் கவனம் செலுத்தாமலிருப்பது கவலைக்குரியதாகும்.முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை முடக்கும் வகையில் அரசாங்கம் சுற்றறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.அரச சேவையாளர்கள் என்ற காரணத்தினால் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு அடிபணிய முடியாது.தவறான தீர்மானங்களை நிச்சயம் சுட்டிக்காட்டுவோம் என்றார்.