(நெவில் அன்தனி)

கொவிட் - 19 தொற்நோய், 2022 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று, தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றின் காராணமான இடைநிறுத்தப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி திங்கட்கிழமை (29) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

சுப்பர் லீக்கின் 3ஆம் கட்டத்தில் நிறைவுசெய்யப்படாமல் இருக்கும் அப்கன்ட்றி லயன்ஸ் அணிக்கும் டிபெண்டர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் 4ஆம் கட்டப் போட்டிகள் குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. 5ஆம் கட்டப் போட்டிகள் டிசம்பர் 10ஆம், 11ஆம், 12ஆம் திகதிகளில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறும்.

6ஆம், 7ஆம் கட்டப் போட்டிகள் டிசம்பர் 17ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிவரையும் 8ஆம் கட்டப் போட்டிகள் டிசம்பர் 27ஆம், 28ஆம், 29ஆம் திகதிகளிலும் கடைசிக் கட்டப் போட்டிகள் 2022 ஜனவரி முதலாம் வாரத்திலும் நடத்தப்படும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன ஊடகப் பிரிவு முகாமையாளர் இர்ஷாத் ஹஷிம்தீன் தெரிவித்தார்.

சுப்பர் லீக் இடைநிறுத்தப்படும்வரை நடந்து முடிந்த 14 போட்டிகளின் அடிப்படையில் சீ ஹோக்ஸ் கழகம்  தனது 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று அணிகள் நிலையில் 9 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கின்றது.

தர்கா நகர், ரெட் ஸ்டார் கழகம் தனது 3 போட்டிகளில் 2 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுடன் 7 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கின்றது.

களுத்துறை புளூ ஸ்டார் கழகம், கலம்போ எவ்சி என்பன தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதிலும் நிகர கொல்கள் அடிப்படையில் புளூ ஸ்டார் கழகம் 3ஆம் இடத்தை வகிக்கின்றது.

அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் (4 புள்ளிகள்), டிபெண்டர்ஸ் எவ்சி (2), ரட்ணம் கழகம் (2), றினோன் கழகம் (1), புளூ ஈக்ள்ஸ் (1), நியூ யங்ஸ் (0) ஆகிய கழகங்கள் முறையே 5, 6, 7, 8, 9, 10ஆம் இடங்களை வகிக்கின்றன.

நியூ யங்ஸ் 6 மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்த ஆட்சேபனைக்கு இன்னும் திர்ப்பு கிடைக்கவில்லை

தமக்கு எதிரான போட்டியில் கலம்போ எவ்சி கழகம் விதிகளை மீறும் வகையில் வீரர் ஒருவரை களம் இறக்கியதாகத் தெரிவித்து வெண்ணப்புவை நியூ யங்ஸ் கழகத்தினால் 6 மாதங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேப மனு தொடர்பான விசாரணை இன்னும் நடத்தப்படமால் இழுபறிநிலையில் இருந்து வருகின்றது. 

இது தொடர்பான விசாரணை இந்த வாரம் பூர்த்தி செய்யப்படும் என சம்மேளன ஊடகப் பிரிவு முகாமையாளர் இர்ஷாத் ஹஷிம்தீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக 3 சட்டத்தரணிகள் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து 6 மாதங்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணத்தை அறிவதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரை 3 தினங்களுக்கு மேல் தொடர்புகொள்ள எடுக்கப்பட்ட பல முயற்சிகள் கைகூடாமல் போனது. இதனை அடுத்தே ஊடக முமையாளரைத் தொடர்பு கொண்டு விடயங்களைக் கேட்டறியக்கிடைத்தது.