(இராஜதுரை ஹஷான்)

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் மன்றத்தினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

முககவசம்,பி.சி.ஆர் பரிசோதனைகள் ஊடாக உழைத்ததை போன்று அரசாங்கம் எரிவாயு சிலிண்டர் ஊடாகவும் உழைக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது என மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் மன்றத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

குற்றப்புலனாய் திணைக்களத்தில் நேற்றைய தினம் முறையாப்பாடளித்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்படுத்தல்,

தரம் வாய்ந்த எரிவாயு தான் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது.ஏனெனில் உலகில் உள்ள அனைத்து குப்பைகளும் வியாபாரத்திற்காக இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தற்போதைய பிரதான பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.சமையல் எரிவாயு நிறுவன தலைவர்கள் தமக்கும்,சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என பொறுப்பற்ற வகையில் கருத்துரைக்கிறார்கள்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடளித்துள்ளோம்.சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.அவ்வாறான பின்னணியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்ப சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை குறிப்பிட்டுக் கொண்டு முக கவசம்,பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக உழைத்ததை போன்று அரசாங்கம் தமக்கு நெருங்கிய நிறுவனங்கள் ஊடாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு உடைகளை அறிமுகம் செய்தாலும் செய்யும் என்றார்.