காணாமல்போன உறவினர்களால் வவுனியாவில் மாவீரர்தினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாவீரர்தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபட்டது.  

மாலை 6.05மணிக்கு அகவணக்கம் செலுத்தபட்டு பிரதான ஈகைசுடர் ஏற்றிவைக்கபட்டது. 

மாவீரரின் தந்தை ஒருவரால் பிரதான ஈகை சுடர்ஏற்றி வைக்கபட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது.  

மகாறம்பைக்குளம் பகுதியில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வவுனியா

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன் இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன் 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட செ.அரவிந்தன் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவரது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் "தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்" 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்து கொண்ட 2021ம் ஆண்டுக்கான "தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்" நவம்பர் 27 இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கடற்புலி கப்டன் கிருபன், மேஜர் நகுலன் ஆகியோரின் உறவினரும், முன்னாள் போராளியுமாகிய பார்த்தீபன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கச் செயலாளருமாகிய கோ.ராஜ்குமார் அவர்களுக்கு நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு வவுனியா பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்களால் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 2021ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.

சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி

தமிழ் தேசிய மாவீரர் நாளான இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.