யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது.

பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில் பொலிசாரும் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

பல்வேறு அச்சுறுத்தல் தடைகளையும் தாண்டி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திடலுக்குள் இராணுவத்தால் உள்நுழைய அனுமதிக்கப்பட்ட உறவுகள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் பொதுச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது உறவுகளை இழந்தவர்கள், மதத் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை,இதனை கண்டு அஞ்சலி செய்ய தீருவில் திடலுக்கு வெளியே ஒன்று கூடி தீபங்களை ஏற்றி பொதுமக்கள் அஞ்சலித்த பொழுது மிகக் கேவலமான முறையில் சிவில் உடையில் இருந்த புலனாய்வுப் பிரிவினர் தீபங்களை தட்டி விட்டதுடன் அநாகரிகமான முறையில் செயற்பட்டனர்.

இதேவேளை இந் அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினரும் பொலிசாரும் நடந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் நடராஜா ரவிராஜின் இல்லத்தில் சுடரேற்றி அஞ்சலி

பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியிலுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜின் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் தீபம் ஏற்றி அஞ்சலி செய்தனர்.

அஞ்சலி நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து இராணுவத்தினர், போலீசார், மற்றும் இராணுவ  புலனாய்வாளர்களும் ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள்  நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். 

பின்னர் சாவகச்சேரி  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடைசெய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை பின்னரே இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர். 

யாழ்ப்பாணம் - சாட்டி

பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம், சாட்டி பகுதியில் இன்று 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சாட்டி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

 சாட்டி துயிலுமில்ல பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுகாஷ் தலைமையிலான அணியினர் மாவீரர் நாளிற்கு தீபம் ஏற்றுவதற்கு முயன்றபோது அங்கு இராணுவம் பொலிசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

யாழ். பல்கலைக்கழகம்

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து மாணவர்களால் யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

சி. வி. விக்னேஸ்வரன் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.