(நா.தனுஜா)


நாடளாவிய ரீதியில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதாரப்பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் நாட்டில் 20 கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.


அதேவேளை கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு நேற்று  வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த்தடுப்புப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளன.


அதன்படி நேற்று சைனோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசி 806 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 2573 பேருக்கும் வழங்கப்பட்டிருப்பதுடன் பைஸர்; முதலாம்கட்டத் தடுப்பூசி 1605 பேருக்கும் இரண்டாம் கட்டத்தடுப்பூசி 1663 பேருக்கும் மூன்றாம்கட்ட செயலூட்டித்தடுப்பூசி 44,537 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.


இத்தரவுகளின் அடிப்படையில் இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் அஸ்ராசெனேகா முதலாம்கட்டத் தடுப்பூசி 1,479,631 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 1,418,593 பேருக்கும் சைனோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசி 11,941,641 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 10,913,528 பேருக்கும்சைனோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசி 11,941,641 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 10,913,528 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஸ்புட்னிக் முதலாம்கட்டத் தடுப்பூசி 159,110 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 155,797 பேருக்கும் பைஸர் முதலாம்கட்டத் தடுப்பூசி 1,536,438 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 458,685 பேருக்கும் மூன்றாம்கட்ட செயலூட்டித்தடுப்பூசி 465,048 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு 804,801 பேருக்கு மொடேனா முதலாம்கட்டத் தடுப்பூசியும் 782,773 பேருக்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.


தொற்றாளர்களும் மரணங்களும்


இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் 519 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 20 கொவிட் - 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 560,864 ஆக அதிகரித்திருப்பதுடன் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 14,278 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இன்று காலை 10 மணிவரையான தகவல்களின்படி தொற்றாளர்களில் 529,240 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன், தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்ற மற்றும் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,258 ஆகும்.