'இசைப்புயல்' ஏ ஆர் ரகுமானின் மெட்டுக்கு இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன் பாடல் எழுதி மீண்டும் பாடலாசிரியராகி இருக்கிறார்.

'ஒத்த செருப்பு' என்ற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்த நடிகர் பார்த்திபன் அடுத்ததாக 'இரவின் நிழல்' என்ற பெயரில் ஒரே ஷாட்டில் திரைப்படம் ஒன்றை படமாக்க இருக்கிறார். 

இதற்கான முயற்சியில் தீவிரமாக அவர் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தில் மூன்று பாடல்களையும் இடம்பெற வைத்திருக்கிறார். இந்தப் பாடல்களுக்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகும் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை எழுதுமாறு ஏ. ஆர். ரகுமான் கேட்டுக்கொள்ள, பார்த்திபன் எழுதியிருக்கிறார்.

இதுதொடர்பாக தன்னுடைய சுட்டுரையில், ''இரவின் நிழல் - ஏ ஆர் ரகுமான் இசை மியூரல்!. பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு டியூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கி கிடக்கிறேன் high யில். 

இறங்கி வந்து அந்த அப்ஸ்ட்ரக்ட் ட்யூனுக்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்கி, பதிவும் செய்யப்பட்டது. சங்குக்குள் அடைக்கப்பட்ட கங்கை போல. முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில் ..சிலிர்த்து.. சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலை ( திரை)க்கு வரும்போது ருசிக்கும்'' என ஆர். பார்த்திபன் பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஏற்கனவே அவரது இயக்கத்தில் வெளியான 'குடைக்குள் மழை', 'வித்தகன்', 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார் என்பதும், நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடலாசிரியராகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.