'ஆர் ஆர் ஆர்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

27 Nov, 2021 | 11:37 AM
image

இசையமைப்பாளர் மரகதமணி இசையில் உருவாகி 'ரணம் ரத்தம் ரௌத்திரம்' என்ற படத்தின் மைய உணர்வை வெளிப்படுத்தும் பாடலான 'உயிரே..' என தொடங்கும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

'பாகுபலி' பட புகழ் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆர் ஆர் ஆர் எனப்படும் ரணம் ரத்தம் ரௌத்திரம்'. இதில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், பொலிவுட் நடிகர்களான அஜய் தேவகன், அலியாபட், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கே. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கேரக்டர் லுக், சிங்கிள் டிராக், இரண்டாவது பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில், நேற்று இந்த படத்தின் மைய உணர்வைத் தாங்கிய 'உயிரே..' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது.

இந்த பாடலை வெளியிட்டு இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி பேசுகையில்,''எம்முடைய படைப்பில் எப்பொழுதும் பார்வையாளர்களை உணர்வு மேலிட வைக்கும் எக்சன் காட்சிகள் இடம் பெறும். சுதந்திர போராட்ட காலகட்டத்திய கள பின்னணியை மையமாக கொண்டிருக்கும் இந்த ஆர் ஆர் ஆர் படத்தின் மைய உணர்வை துல்லியமாக அவதானித்து இசையமைப்பாளர் மரகதமணி மனம் உருகும் மெட்டை அமைத்திருக்கிறார். 

இதற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி நெகிழ்ச்சியான வரிகளை எழுதி பார்வையாளர்களின் இதயத்தை வருடி இருக்கிறார். இந்தப்படத்தின் மைய உணர்வை தாங்கியிருக்கும் இந்தப்பாடலின் காணொளியை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆர் ஆர் ஆர் படத்தை பற்றிய பல்வேறு சுவாரசியமான விடயங்களை இனிவரும் காலத்தில் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.''என்றார்.

டி வி வி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் தனய்யா, தயாரிப்பாளர் என். வி. பிரசாத் ஆகியோர் தயாரித்திருக்கும் 'ஆர் ஆர் ஆர்' படத்தை லைகா புரொடக்சன்ஸ் வெளியிடுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right