(ஆர்.யசி.,எம்.ஆர்.எம்.வசீம்)

இரசாயன உர பாவனையால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படும் செய்தி, கட்டுக்கதையாகும்.

அதில்  எந்த உண்மையும் இல்லை. அத்துடன் தேயிலைக்கு தேவையான உரத்தை அரசாங்கம் விரைவாக வழங்கவேண்டும். இல்லாவிட்டால் தோட்ட விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்படுள்ளதால் ஈபிஎப் கிடைப்பதில்லை  ; நடவடிக்கை எடுக்கவேண்டும் - ராதாகிருஷ்ணன் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற கமத்தொழில்  மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டின் தேசிய விவசாய துறையில் 51வீதமானவர்களே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டொன்றின் பொருளாதாரம் வளர்ச்சியடைய ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைக்கவேண்டும்.

ஆனால் எமது அதற்கு மாற்றமாகவே இடம்பெற்றுவருகின்றது. எமது உற்பத்தியை முறையாக மேற்கொள்ள தவறியதால்தான் எதை எடுத்துக்கொண்டாலும் அதனை இறக்குதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய பொருட்களில் இன்று தேயிலையே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அத்துடன் எமது ஏற்றுமதி சிறந்த முறையில் இடம்பெற எமது விவசாய நடவடிக்கைகள் நல்லமுறையில் இடம்பெறவேண்டும்.

விவசாயத்தில் நல்ல விளைச்சலை பெற்றுக்கொள்ள அதற்கான நல்ல உரம் கிடைக்கவேண்டும்.  1960காலப்பகுதிக்கு முன்னர் சேதன பசளையிலேயே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு உலகளாவிய ரீதியில் விவசாய உற்பத்தியில் அதிவளர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக இரசாயன உரப்பாவனைக்கு சென்றது.அதனால் அரசாங்கங்கள் இரசாயன உரம் இறக்குமதி செய்து விவசாய உற்பத்திகளை அதிகரித்து ஏற்றுமதி செய்து வந்தன.

இந்நிலையில் திடீரென விவசாயத்துறைக்கு இரசாயன உரம் இறக்குமதி செய்வதை தடைசெய்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயமும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

இதனால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இன்றைய விவசாய அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம். நுவரெலியா மாவட்டத்தில் 50 வீதமானவர்கள் விவசாயம் செய்பவர்களே இருக்கின்றனர். 

என்றாலும் இம்முறை விவசய உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இதற்கு உரப்பிரச்சினையுடன் தொடர்ந்து பெய்துவரும் மழையும் காரணமாகும். 

அதனால் இன்று மரக்கறி விலையும் பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. அதேபோன்று உருலைக்கிழங்கு உற்பத்தி செய்து அறுவடை இடம்பெறும் காலகட்டத்தில்தான் வெளிநாடுகளில் இருந்து உருலைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.

இதனால் எமது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும் தற்போது டொலர் பிரச்சினை இருப்பதால் அரசாங்கம் என்ன செய்யப்போகின்றதோ தெரியாது.

மேலும் தேயிலைக்கு தேவையான உரம் வழங்குவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அவ்வாறு இடம்பெற்றால் நல்லது. இல்லாவிட்டால் தோட்ட விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும்.

அவர்களின் சம்பள பிரச்சினை இருந்துவருகின்றது. அந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கும் நிலையே ஏற்படும். அத்துடன் இரசாயன உரம் பாவனையால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படும் செய்தி கட்டுக்கதையாகும். 

அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. விசேடமாக மன்னார், அனுராதபுரம் போன்ற இடங்களில சிறுநீரக நோயாளர்கள் 2.9 வீதம் இருக்கின்றார்கள்.

ஆனால் ரசாயன உரம் பாவிக்கும் நுவரெலியா மாவட்டத்தில் சிறுநீராக நோயாளர்கள் 0.1வீதமாகும். தேசிய ரீதியில் அது 6.7வீதமானவர்களே சிறுநீரக நோயாளர்களாக இருப்பதால் சிறுநீரகம் பாதிக்கும் என்ற விடயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

எனவே இரசாயன உரத்தை தடைசெய்ததற்காக ஜனாதிபதிக்கோ அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேக்கோ எதிராக பேசியோ அவர்களை தாக்கியோ பயனில்லை.

மாறாக இரசாயன உரத்தை தடைசெய்யவேண்டும் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அவர்களை கண்டுபிடித்து தூக்குப்போட வைக்கவேண்டும். அப்போதுதான் இந்த நாடு உருப்படும். ஜனாதிபதிக்கு இந்த ஆலாேசனையை வழங்கியது எதிர்க்கட்சியில் இருக்கும் தேரரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

ஏனெனில் அவர்தான் அடிக்கடி இரசாயன உரத்துக்கு எதிராக இந்த சபையில் பேசி வந்தார். அத்துடன் இது விவசாய நாடு என்றடியால் இந்த நாட்டின் உயர்வு விவசாயத்திலேயே தங்கி இருக்கின்றது. அதனால் நாங்கள் எமது விவசாயத்துறையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றார்.