(நா.தனுஜா)

இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா வழங்கிய தலைமைத்துவம் தொடரவேண்டும் என்று அந்நாட்டின் அரச மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இந்தியாவுடன் கைகோர்த்து மாறுபட்டதும் செயற்திறனானதுமான வகிபாகமொன்றை அமெரிக்கா வெளிப்படுத்தவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அடங்கிய சட்டநிபுணர் குழு கடந்த 13 ஆம் திகதி அமெரிக்கா பயணமானது. 

தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இக்குழுவினருடன் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினரும் இணைந்து அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்புக்களின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் உலகத்தமிழர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்மக்களின் கரிசனைகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைவகுப்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடன் (எம்முடன்) இணைந்து கடந்த 15 - 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பில் நாம் திருப்தியடையும் அதேவேளை, அமெரிக்கத்தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகள் மற்றும் அவர்களின் பிரதிபலிப்புக்கள் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

அதன்படி வாஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லு, பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டேர்லிங், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவிச்செயலாளர் லிஸா ஜே.பீட்டர்ஸன், சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் அதிகாரி மைக்கேல் கொஸாக், தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பணிப்பாளர் மற்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்புப்பேரவையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஆகியோருடன் மேற்படி பிரதிநிதிகள் குழு சந்திப்புக்களை மேற்கொண்டது. 

அதுமாத்திரமன்றி காங்கிரஸ் வெளிவிவகாரக்குழு மற்றும் செனெட் வெளிவிவகாரக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் துணை நிர்வாகி, அமெரிக்க காங்கிரஸின் கொள்கைவகுப்பாளர்கள், இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர்கள் மற்றும் பிராந்தியங்களுக்கான துணைச்செயலாளர்கள் ஆகியோரையும் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்தனர். 

அதேபோன்று நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கான அமெரிக்காவின் பிரதி நிரந்தர வதிவிடப்பிரதிநிதி, நோர்வேயிற்கான ஐ.நா பொதுச்சபையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதிகள் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகத்தின் கீழுள்ள ஐ.நா அலுவலகத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துப்பேசினர்.

இச்சந்திப்புக்களின்போது இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா வழங்கிய தலைமைத்துவத்தை கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் பாராட்டினர். 

அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமைத்துவம் தொடரவேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றத்தைக்காண்பிக்க இலங்கை தவறியுள்ள நிலையில், இலங்கையிலுள்ள சவால்களைக் கையாள்வதற்குப் பன்முகத்தன்மை வாய்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது குறித்து அமெரிக்கா சிந்திக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படல், நீண்டகாலப்போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கு அடிப்படையாக அமைந்த காரணங்களை ஆராய்தல் உள்ளடங்கலாக முழுமையான நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதில் அமெரிக்கா செயற்திறனான பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 

அதுமாத்திரமன்றி மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட தமிழ்மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும் என்றும் தமிழ்த்தரப்புப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் எதேச்சதிகாரத்தை நோக்கிய இலங்கையின் பயணம், இராணுவமயப்படுத்தப்பட்ட அரசநிர்வாகம், தமிழ், முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் மேலும் ஓரங்கட்டப்படல், மக்கள் எதிர்கொண்டிருக்கும் மிகமோசமான பொருளாதார நெருக்கடி உள்ளடங்கலாக இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் குறித்தும் அமெரிக்க உயர்மட்டப்பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பாரம்பரிய வாழ்விடக்கட்டமைப்புக்களை மாற்றியமைக்கும் நோக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் தீவிர இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு எதிராகத் தமது காணிகளையும் அடையாளத்தையும் பாதுகாத்துக்கொள்வதில் தமிழ்ச்சமூகம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் பற்றி இச்சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்டதுடன் காணிகளை அபகரிக்கும் நோக்கில் அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான சில தகவல்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அதுமாத்திரமன்றி சர்வதேசத்தின் உதவியுடன் இத்தகைய செயற்பாடுகளை உடனடியாகத் தோற்கடிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைப்பதில் காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இந்தியாவுடன் கைகோர்த்து அமெரிக்கா வழங்கக்கூடிய மாறுபட்ட வகிபாகம் குறித்தும் அடிக்கோடிட்டுக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.